கோமாளிகள் வாழ்வும்

Estimated read time 0 min read

Web team

r.jpg

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !

நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

நூல் வெளியீடு : 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604 408. பக்கம் : 112, விலை : ரூ. 70

******

நூல் ஆசிரியர் இரா. தங்கப்பாண்டியன் அவர்கள் தேனி மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர்களில் ஒருவர். நாட்டுப்புற கலைகளில் வரும் கோமாளிகள் பற்றி ஆய்வு செய்த ஆய்வேட்டை நூலாக்கி உள்ளார்.

பல்வேறு நூல்கள் படித்து பல கலைஞர்களைச் சந்தித்து கருத்து அறிந்து கேள்விகள் கேட்டு கூத்துக்களைப் பார்த்து களப்பணியாற்றி வழங்கிய ஆய்வேட்டின் சுருக்கம் என்பதால் நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிந்தது.

ஆய்வுகளை நூலாக்கி வழங்கும்போது படிப்பதற்கு சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்த நூல் படிக்க சுவையாக உள்ளது. பாராட்டுக்கள், நல்ல நடை.

நாட்டுப்புறக்கலையான இராசா இராணி வேடத்துடன் வரும் கோமாளி, குறவன் குறத்தி ஆட்டத்தில் வரும் கோமாளி, வள்ளி திருமணம் நாடகத்தில் வரும் கோமாளி, நல்ல தங்காள் கதை சொல்லும் கோமாளி என பல்வேறு வகையான கோமாளிகளின் கலைநிகழ்ச்சிகள் பற்றியும் அவர்களது சொந்த வாழ்வில் உள்ள சோகங்களையும் படம்பிடித்துக் காட்டி உள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றாக உள்ளது கோமாளி பாத்திரம்.

இதில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே உள்ளனர். இவர்களை பொதுமக்கள் சரியாக மதிப்பது இல்லை. வயதில் மூத்தவராக இருந்தாலும் கோமாளியை வாடா, போடா என்று ஒருமையில் அழைக்கும் கொடுமையின் காரணமாக இக்கலையை வாரிசுகள் செய்திட பெற்றோர்கள் விரும்பவில்லை.

திருவிழாவில் இரவு தொடங்கி அதிகாலை வரை நிகழ்ச்சிகள் நடப்பதில், நிகழ்ச்சியில் பங்குபெறும் கோமாளி, மைக் செட் போடுபவர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு உட்பட்டு உடலைக் கெடுத்து நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றனர்.

ஆடல், பாடல் நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களை போல கோமாளிகளை மதிப்பதில்லை. முறை சாப்பாடு என்று ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று உணவருந்த வைப்பார்கள். இரண்டு, மூன்று நாள் நடக்கும் நிகழ்ச்சியின் போது இரவில் தங்குவதற்கு ஆரோக்கியமான இடம் வழங்குவதில்லை. சத்துணவு மையம் போன்ற இடங்களில் கொசுக்கடியால் படுக்க வேண்டிய நிலை.

இப்படி கோமாளிகளின் வாழ்வில் உள்ள இடர்பாடுகளை நூல் முழுவதும் நன்கு உணர்த்தி உள்ளார். நடிகர் வடிவேலு கோமாளியாக இருந்தவர் என்ற உண்மையை அவர் எந்த நேர்முகத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் அவருடன் கலைநிகழ்ச்சியில் இருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த உண்மை நூலில் உள்ளது.

இந்நூலை ஓய்வறியா கலைஞன் பாவலர் செம்முத்து சாமி என்றா கோமாளிக்கு காணிக்கை ஆக்கியது சிறப்பு.

தேனி மாவட்டம் அழகாபுரி சின்னன் அவர்களின் நகைச்சுவையைப் பார்த்து விட்ட் 25 வருடங்களுக்கு முன்பு நடிகர் மேஜர் சுந்தரராசன், திரைப்படத்துறைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் சின்னன் அவர்கள் அன்று மறுத்து விட்டார். காரணம் என்னை நம்பி இங்கே 30 குடும்பங்கள் உள்ளன என்று சொல்லி உள்ளார்.

ஓம் முத்துமாரி குழுவில் இன்னோரு கோமாளியய் வலம் வந்தவர் மாடசாமிக் கோனார் என்ற வரலாற்று உண்மைகள் நூலில் உள்ளன.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு தொலைக்காட்கிகளும், சபாக்களில் பாடும் கலைஞர்களுக்கு பணத்தை வாரி வழங்குவதும், பஞ்சம், பட்டினி வறுமையில் வாடிடும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மிகக்குறைவாகவே வழங்குகின்றனர். போக்குவரத்து செலவிற்குக் கூட போதுமானதாக இருப்பதில்லை.

நூலிற்கு வரும் நாட்டுப்புறக் கலையை வளர்க்க நூலாசிரியர் நல்ல பல தீர்வுகளையும் நூலின் இறுதியில் வழங்கி உள்ளார். சிறப்பு பாராட்டுக்கள்.

கிராம விழாக்களில் நவீன ஆடல் பாடல் நடத்துவதை விட்டு விட்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.

கோமாளிகளும் குடிப்பழக்கம் இருந்தால் விட்டுவிடுங்கள். இரட்டை அர்த்த வசனங்களையும் ஆபாச வசனங்களையும் விட்டுவிடுங்கள் என அறிவுரையும் வழங்கி உள்ளார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கிடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார்.

கோமாளிகள் சொல்லும் முட்டை கதை நன்று. தவம் இருந்த ஒருவருக்கு 3 முட்டை வழங்கி வீட்டுக்குச் சென்றபின் வேண்டியதை சொல்லி முட்டையை உடை, வேண்டியது வரும் என்கின்றார். நகை கேட்பதா? பணம் கேட்பதா? என கணவன் மனைவிக்குள் சண்டை, கோபத்தில் மயிறு என்று சொல்ல ஒரு முட்டை கீழே விழ உடைந்து எல்லா இடமும் மயிராகி விடுகின்றது. மயிரெல்லாம் போயிரு என்று சொல்லி இரண்டாவது முட்டை உடைக்க தலைமுடி, புருவமுடி எல்லாம் போய்விடுகின்றது. எங்கெங்கே முடி வேண்டுமோ அங்கெல்லாம் முடி இருக்கட்டும் என்று மூன்றாவது முட்டை உடைக்கின்றனர். இயல்பாகி விடுகின்றனர். இப்படி ஒரு சுவையான கதை நன்று.

வேண்டுகோள் : இந்த நூலின் அடுத்த பதிப்பில் கோமாளி ஒருவரின் புகைப்படத்தை அட்டையில் போடுங்கள். சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. நீக்கி வெளியிடுங்கள். நூலில் 4 நேர்காணல்கள் உள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author