சாதிக்கும் வரை.

Estimated read time 1 min read

Web team

r2.jpg

சாதிக்கும் வரை !

நூல் ஆசிரியர் : கவிஞர் எம்.எஸ். வேல் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

சபரிமதி வெளியீடு, அருணாசலம் புதூர், தாரமங்கலம் (அ),
சேலம் (மா)-636 502. பேச: 95434 44113, பக்கம் : 80, விலை : ரூ.50.
*******
நூல் ஆசிரியர் கவிஞர் எம்.எஸ்.வேல் அவர்களுக்கு இது முதல் நூல். முத்தாய்ப்பாக வந்துள்ளது. நூலை ஈழத் தமிழர்களுக்கு காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு. ஈழத்தமிழர்கள் பட்ட துயரத்தை மறக்கவில்லை, நீறு பூத்த நெருப்பாகவே இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. கவிஞர் சி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அணிந்துரை நன்று. நூலாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்ட வைர வரிகள் சிந்திக்க வைத்தது.

கல்லில் மறைந்திருக்கும் சிற்பம் போல்
என்னுள் புதைந்திருந்த சிந்தனைகள்
வெளிவர காரணமாயிருந்தது காதல் தான்
நம்மில் பலருக்கும் அதே தான் என்று
நினைக்கிறேன்!

உண்மை தான். பெரும்பாலான கவிஞர்கள் கவிதை எழுதத் தொடங்கியதற்கு உந்துசக்தி, ஊக்க சக்தி காதல் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

மௌனமாய் உண்மை
பேசும் பணம்
காவல் நிலையம் !

காவல் நிலையம் சென்றவர்களுக்குத் தெரியும். அங்கு பணம் தான் பேசும். ஒரு சில விதிவிலக்கான நேர்மையான காவலர்களும் உண்டு என்பதும் உண்மையே!

குளிர்சாதனப் பெட்டி
பறித்தது
பிச்சைக்காரனின் உணவை!

உண்மை தான், முன்பெல்லாம் மிச்சமானால் பிச்சைக்காரர்-களுக்கு இடுவது வழக்கம். இப்போதெல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் நாமே சாப்பிட்டு வருகிறோம். இன்னும் சிலர் இன்று உள்ள புதியதை உண்ணாமல் நேற்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பழையதை உண்பதையும் இன்றைய புதியதை நாளை உண்பதையும் காண்கிறோம்.

உரிமை கேட்டால்
உயிர்ப்பலி – இது
இலங்கையில் எழுதப்படாத சட்டம்!

சிங்களருக்கு உள்ள உரிமைகள் தமிழர்களுக்கும் வேண்டும் என்றனர், தர மறுத்தனர். விடுதலை கேட்டனர். விடுதலை கேட்டதற்காக இலட்சக்கணக்கில் கொன்றுகுவித்த ராசபட்சே கொடுங்கோலன் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கைது கூட செய்யப்படவில்லை என்பது வேதனை.

என்னைச் சிற்பமாக
எண்ண வேண்டாம்,
அற்பமாக எண்ணி விடாதே!

சிற்பம், அற்பம் என சொல் விளையாட்டு விளையாடி உள்ளார், பாராட்டுக்கள்.

காதல் கவிதைகள் இல்லாமல் இருக்குமா? அதுவும் முதல் நூலில் கண்டிப்பாக இருக்கும்.

சிறு வயதில்
பட்டாம்பூச்சி
பிடிக்க அலைந்தேன்
இன்று உன்னை
அடைய அலைகிறேன்
வண்ணத்துப்பூச்சியிடம்
தோற்றேன்.
ஏனெனில் அது பூச்சி
உன்னிடம்
தோற்கமாட்டேன்
ஏனெனில் நீ என் மூச்சு !

காதலில் வெற்றி எனதே என கவிதையில் முழக்கமிடுகின்றார், பாராட்டுக்கள்.

மல்லித் தோட்டமருகே
செல்லும் போதெல்லாம் வீசுகிறது
உன் ஞாபகங்கள் !

மல்லிகைத் தோட்டமருகே காதலனும் காதலியும் சந்தித்து இருக்கலாம் அல்லது காதலன் காதலிக்கு மல்லிகைப் பூ வாங்கி தந்து இருக்கலாம். அல்லது காதலிக்கு தினமும் மல்லிகைப் பூ சூடும் பழக்கம் இருக்கலாம். இப்படி பல நினைவுகளை மலர்விக்கின்றது கவிதை!

மனைவியே என்றும்
உன் பலம்
அவளை மணக்க ஏன் சம்பளம் !

வரதட்சணைக்கு எதிராக மிக எளிமையாக வடித்த கவிதை நன்று. நூலாசிரியர் கவிஞர் எம்.எஸ். வேல் அவர்கள் ஹைக்கூ கவிதையின் நுட்பம் அறிந்து ஹைக்கூவாகா அடுத்த நூல் வடிக்கலாம்.

நம்பிக்கை !

நம்பிக்கை இருக்கட்டும் காலடியில்
உலகே உந்தன் காலடியில்
மீன்களுக்கு ஒருபோதும் குளிர்வதில்லை
சூடுபடாத தங்கம் மிளிர்வதில்லை
தண்ணீரில் மூழ்கி விட்டால் பனி தெரியாது
லட்சிய உறுதி கொண்ட மனம் வலி அறியாது
தீபங்கள் தலைகீழாய் எரிவதில்லை
இதை ஏனோ நாம் அறிவதில்லை
கண்ணாடி உடைந்தாலும்
பிம்பங்கள் பல காட்டும்
அறுதியாய்ப் போராடு
துன்பங்கள் வரப் பறந்தோடும் !

நம்பிக்கை தரும் கவிதை நன்று. இதில் எடுத்துக்காட்டும் உவமைகள் மிக நன்று. மீன்களுக்கு ஒருபோதும் குளிர்வதில்லை. சூடுபடாத தங்கம் மிளிர்வதில்லை. சிந்திக்க வைக்கும் வைர வரிகள். படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதை விதைக்கும் கவிதை.
இலஞ்சம், ஊழல் எங்கும் தலை விரித்து ஆடும் அவலத்தை தோலுரித்துக் காட்டும் கவிதை நன்று.

நிழற்படம்
ஒத்து போகவில்லையென
விண்ணப்பத்தை
நிராகரித்தவர்
ஏற்றுக் கொண்டார்
கூடவே
காந்தி படத்தை வைத்தவுடன் !

இந்த பக்கத்தில் பொருத்தமாக புதிய 2000 ரூபாய் தாளை அச்சடித்திருப்பது நன்று. செல்லாத ரூபாய் 500, 1000 போடவில்லை. நூல் வடிவமைத்தவரின் யுத்தி நன்று.

இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கொடுமை ஈழத்தமிழர் படுகொலை. திட்டமிட்டு தமிழினத்தை அழித்தனர். இன்று வரை விசாரணை என்ற பெயரில் அய்.நா. மன்றம் நாட்களை நகர்த்துகின்றது. குற்றவாளி தண்டிக்கப்படவில்லை. இதனை உணர்ந்த நூலாசிரியர் வடித்த கவிதை நன்று.

அறிஞர்களே
சந்திரனில்
நீருண்டா என்ற
ஆராய்ச்சியை நிறுத்து
சிங்கள் நெஞ்சில்
ஈரமுண்டா என்ற
விசாரணை தொடங்கு !

ஈரமுள்ள ஒரு சில சிங்களர் விதிவிலக்காக இருப்பதாக ஈழத்தமிழர்கள் என்னிடம் சொல்லி உள்ளனர். பெரும்பாலானவர்கள் குறிப்பாக புத்த பிட்சு உள்பட கல் நெஞ்சுக்காரர்களாகவே உள்ளனர் என்பது உண்மை.

மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதி திரையுலகில் கொடி கட்டிப் பறந்த கவிஞர் வாலி பற்றிய கவிதை நன்று.

வாலிபக் கவி!
வாலிபக்கவியே வாலி
தமிழ்ப்பால் குடித்த ஆள்–நீ
தமிழ்க்கடலில் மூழ்கியோரில் முத்தெடுத்தவன்
நிச்சயமாய் புண்ணியவதி
உன்னைப் பெற்றெடுத்தவள்
கலைத்தாயிடம் பெற்று வந்தாய் வரம்
நீ தாடி வருடினாலே புதுக்கவிதை வரும் !

கவிஞர் வாலி திரைப்படத்திற்கு பாடல் எழுதிட முயன்று தோல்விகள் கண்டு மனம் வெறுத்து சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் பயணப்பட முடிவெடுத்திட்ட போது, கவியரசர் கண்ணதாசனின் மயக்கமா? கலக்கமா? பாடல் கேட்டு மனம் மாறி திரும்பவும் பாடல் எழுதிய முயற்சி செய்து வென்றவர் காவியக் கவிஞர் வாலி.

ஒரே ஒரு கவிதை வரி ஒருவரின் வாழ்வில் மாற்றம் உருவாக்குமா? என்று கேள்விக்கு விடை வாலியின் வெற்றி.

இப்படி பல நினைவுகளை மலர்வித்தது கவிதை. மனிதாபிமானத்துடன் இரக்க சிந்தனையுடன் வடிக்கப்பட்ட கவிதைகள் நன்று. நூலாசிரியருக்கு ஒரு வேண்டுகோள் அடுத்த பதிப்பு வரும் போது தங்களின் முன் எழுத்தை தமிழ் எழுத்தாக்கி வெளியிடுங்கள்.
.

Please follow and like us:

You May Also Like

More From Author