நூல் மதிப்புரை ம.திருமலை

Estimated read time 1 min read

Web team

IMG-20240511-WA0047.jpg

ஹைக்கூ முதற்றே உலகு!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் விமர்சனம் : முனைவர் ம. திருமலை,
முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்.

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 102 விலை : ரூ. 100

******

கவிஞர் இரா. ரவி அவர்கள் எழுதியுள்ள “ஹைக்கூ முதற்றே உலகு” என்ற கவிதைத் தொகுதியைப் படித்து இன்புற்றேன். ஹைக்கூ கவிதை வடிவம் என்பது ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கவிதை வடிவம் ஆகும். தமிழில் ஹைக்கூ தோன்றிய போது முற்றிலும் ஜப்பானிய உருவ, உள்ளடக்கங்களைச் சுவீகரித்துக்கொண்டு பிறக்க-வில்லை

ஜப்பானிய மொழியில் ஹைக்கூ கவிதை வடிவம் தோன்றியபோது அதன் முந்தைய வடிவமான “ரென்கா” (RENKA) கவிதையின் சாயலைச் சிறிதே பெற்றிருந்தது. “ரென்கா” கவிதை அளவில் நீளமானது. பல கவிஞர்கள் பங்கெடுத்துக் கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளின் போது ஒருவர் ஒரு பத்தியைப் பாட, இன்னொருவர் அடுத்த வரியைப் பாட, வேறொருவர் மேலும் தொடர்ந்து பாடிக் கவிதையை நிறைவு செய்வது ஒரு கவிதை விளையாட்டு முறை. இதில் முதல் பத்தியைப் பாடுபவர் அதில் இயற்கை பற்றிய குறிப்பை இணைத்துப் பாடுவது மிக முக்கியமான விதியாகும். இயற்கை பற்றிய குறிப்பினைக் கொண்டிருந்த ரென்கா கவிதையின் முதல் பகுதி மட்டும் காலப்போக்கில் தனி இலக்கிய வகையாக வளர்ச்சியடைந்தது. இதுவே ஹைக்கூ கவிதை என்று அழைக்கப்பட்டது.

இயற்கை வெறும் சித்தரிப்பாக இருந்த நிலை மாறி இயற்கை மனித மனத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஹைக்கூ கவிதையில் சிறப்பான இடத்தைப் பெற்றது. நாம் இன்றைக்கு ஒரு ஹைக்கூ கவிதையைப் படிக்கும்போது அதில் வரும் இயற்கை வருணனையில் வெறுமனே இயற்கையாகப் பார்க்காமல், வேறு ஏதோ ஒன்றைத் தேடுவதற்கு இதுதான் காரணம்.

ரென்கா முதல் பத்தி இயற்கை தனிக்கவிதையாதல் ஹைக்கூ தமிழில் ஹைக்கூ

என்ற வழியில் பயணம் செய்து ஹைக்கூ கவிதை தமிழில் தனி இலக்கிய வகையாக இன்று கோலோச்சி வருகிறது.

இத்தகைய வளர்ச்சி வரலாறு ஹைக்கூ கவிதைக்கு உண்டு. இச்செய்திகளை டபிள்யூ.ஜெ. ஹிக்கின்சன் என்பார் குறிப்பிடு-கிறார். அவருடைய நூல் “THE HAIKU HAND BOOK” என்பதாகும். இதே செய்தியை நான் இளம் விரிவுரையாளராக இருந்தபோது ஒரு கட்டுரையில் கூறியபோது சில மூத்த ஆசிரியர்கள் ஒன்றும் கூறாமல் சிரித்து என்னை அவமதித்தனர். எதற்காகச் சிரித்தார்கள் என்று புரியாமல் குழப்பமடைந்து “நாம் ஏதாவது தவறாக எழுதி விட்டோமா?” என்று மனம் பதைத்து, உடனே வீட்டிற்குத் திரும்பி, மீண்டும் நான் ஹிக்கின்சனுடைய ஆங்கில நூலைப் படித்துப் பார்த்து என் கருத்தை உறுதி செய்து கொண்ட பிறகு, கட்டுரையில் இக்கருத்தை இணைத்தேன். பிறகு தான் அவர்கள் எந்த ஹைக்கூ வரலாற்று மூல நூலையும் படிக்காமல், என்னளவில் தெளிவாக இருந்த என்னைப் பார்த்துச் சிரித்தனர் என்று ஊகித்து அறிந்தேன். இதுபோல பலரை நான் கண்டிருக்கிறேன். “ஹைக்கூ கவிதை இயற்கையைப் பாட வேண்டும், ஒவ்வொரு கவிதையும் பருவகாலம் பற்றிய குறிப்புச் சொல்லை அவசியம் பெற்றிருக்க வேண்டும்” என்பது ஹிக்கின்சன் கூறும் முக்கியமான வரையறை. தமிழில் ஹைக்கூ கவிதை தோன்றிய போது இயற்கைப் புனைவு மிகுதியாக இடம் பெற்றிருந்தது குறித்துக் கூற வேண்டுவதில்லை. எனினும் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் தங்களுக்கெனத் தனி வழியை வகுத்துக் கொண்டனர் என்பதைத் தமிழ் ஹைக்கூ கவிதை வரலாற்றை அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் வெறுமனே இயற்கையைப் பற்றிப் பாடாமல் இயற்கையுடன் சமுதாயச் செய்திகளையும் இணைத்தே பாடத் தொடங்கினார்கள்.

கவிஞர் இரா. ரவி – இவ்வாறு தனிவழி வகுத்துக்கொண்ட தமிழ் ஹைக்கூ கவிஞர்களில் ஒருவர். பொதுவாக உரைநடையை விடக் கவிதை வடிவத்தில் மொழி மிகவும் செறிவுடன் கையாளப்பட வேண்டும். கவிதையிலும் அளவில் மிகச்சுருக்கமானதான ஹைக்கூ கவிதைகளில் மொழி மிகவும் கவனத்துடனும் செறிவாகவும் கையாளப்பட வேண்டியதாகிறது. இந்த நிர்ப்பந்தத்தினால் தான் ஹைக்கூ கவிதைகளில் வினைமுற்றுத் தொடர்கள் மிகுதியாக இடம்பெறுவதில்லை. பெரிதும் எச்சத் தொடர்கள் தான் ஹைக்கூ கவிதைகளில் இடம்பெறும். இந்த உண்மையை ஹைக்கூ கவிதைகளை நுட்பமாகப் படிப்பவர்களால் உணர முடியும். இந்த இடத்தில் இன்னொரு செய்தியைக் குறிப்பிட விரும்புகிறேன். நமது வள்ளுவப் பேராசான் சுருங்கிய வடிவத்தில் குறட்பாக்களைப் புனைந்தபோதும் அவற்றில் அதிகளவு வினைமுற்றுத் தொடர்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது அவருடைய மொழி ஆளுமைத்திறத்திற்குச் சான்றாகும். கவிஞர் இரா. ரவியின் கவிதைகளில் மனநிறைவளிக்கும் வகையில் மொழிப் பயன்பாடு அமைந்திருக்கிறது என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

அழகிய கட்டடத்தின் முன்னே வைக்கப்படுவது திருஷ்டி பொம்மை! அதாவது அழகிய கட்டடத்தின் மீது எவரும் தங்கள் கண்பார்வையைச் செலுத்தி விடக்கூடாது என்பதற்காக வைக்கப்படும் ஒரு சின்னம். அது ஒழுங்கற்ற வடிவத்தில் இருப்பதால் எவர் கண்பார்வையும் அதன் மீது படாது என்பது நம்பிக்கை. ஆயினும் திருஷ்டிப் பொம்மை மட்டுமே ஒருவர் கண்ணில் நீண்ட நாட்களாகப் பட்டுக்கொண்டே இருக்கிறபோது, காலப்போக்கில் அது ஒருவருடைய கண்ணுக்கு அழகுடைய-தாகத் தோன்றிவிடும் வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்ற செய்தியை கவிஞர் ரவி ஒரு கவிதையில் கூறுகிறார். இனிக் கவிதையைக் காண்போம்.

“ரசித்துப் பார்த்தால்
அழகு தான்
திருஷ்டிப் பொம்மை”!

என்ற கவிதை அழகுற்ற ஒன்று. அழகுடையதாகத் தோன்றும் மாய வித்தையைக் காட்டுகிறது. மேலும் அழகு என்பதற்கு எது வரைவிலக்கணம்? அழகற்ற ஒரு பொருள் பலகாலம் தொடர்ந்து பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கும்போது அழகுடையதாக மாறி விடுகிறது.

இயற்கையை எடுத்துக்காட்டுவதன் மூலம் மனித வாழ்க்கையை விளக்குவது சங்க இலக்கியம் தொட்டு தொடர்ந்து வரும் ஒரு சிறந்த இலக்கிய மரபாகும். ஹைக்கூ கவிதைகளிலும் இயற்கைக்குச் சிறந்த இடம் உண்டு. ஒரு மரத்தின் மேற்பகுதி தான் அனைவரின் கண்களுக்கும் தெரியும். அந்த மரத்தினைத் தாங்கி நிற்கும் வேர் நாம் கண்களுக்குத் தெரியாது”. அது மண்ணுக்குள் மறைந்திருக்கும். ஆனால் மரத்தின் மற்ற பகுதிகளை விடக் கடுமையாக உழைப்பது வேர் தான். தன்னை மறைத்துக் கொண்டு, தனக்காக என்று எதுவும் செய்து கொள்ளாமல் மரத்தின் கிளைகளுக்காகவும் இலைகளுக்-காகவும், காய்-கனிகளுக்காகவும் நீரையும் ஏனைய சத்துக்-களையும் கடினமான மண் தரையிலிருந்து உறிஞ்சி எடுத்து மேலே அனுப்புவதிலேயே மகிழ்ச்சி அடையும், வேருக்கு மரம் செய்தது என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் கிடைக்கும் விடை ஒன்றுமில்லை என்பது தான். இது கடினமானதாகவும், தன்னலமில்லாமலும் உழைக்கும் வேருக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா என்றெல்லாம் சாதாரண மனிதர்கள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு அதெல்லாம் மனத்தில் தோன்றாது. ஆனால் கவிஞர்களுக்குத் தான் இத்தகைய வினாக்கள் மனத்தில் தோன்றும். எனவே அவர்கள் தான் இத்தகைய வினாக்களைக் கேட்பார்கள், கவிஞர் ரவி கேட்கிறார்.

“வெளியே தெரிவதில்லை
வேர்களின் உழைப்பு
வேர்களின்றி மரமில்லை”.

இது எவ்வளவு நுட்பமாக ஒரு கேள்வியை முன்வைக்கிறது? இக்கவிதை மரம், வேர் பற்றிக் கூறினாலும் அதற்கு அப்பால் ஏதோ தொனிப்பொருளாக உணர்த்துவது போலத் தோன்றுகிறதே! என்ன அது? சிறிது யோசிக்க யோசிக்கப் படிப்படியாக ஏதோ புரிகிறது! மெல்லிய வெளிச்சம் கவிதைக்குள் பரவுகிறது. ஆம்! இக்கவிதை புறக்கணிக்கப்பட்ட மனித ஆத்மாக்களைத் தான் குறிப்பிடுகிறது. சமுதாயம் நிலை பெற, உயர், சில மனிதர்கள் தங்கள் உழைப்பினைச் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். வேர்கள் மனதைத் தாங்குவதைப் போல அவர்கள் சமுதாயத்தைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள். வேர்கள் மண்ணின் ஆழத்திற்குள் ஊடுருவிச் சென்று மரத்திற்குத் தேவையான தண்ணீரையும் சத்துக்களையும் உறிஞ்சி மேலே அனுப்புவதைப் போல, அவர்கள் சமுதாயத்தை வாழவைக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிலை இன்னும் மாறவில்லை. அவர்கள் தங்களை மறைத்துக் கொண்டு உழைத்து அப்படியே மறைந்தும் போகிறார்கள். இந்த மாதிரியான கடினமான உண்மைகளை இக்கவிதை கூறுகிறது. நாம் முன்னர் குறிப்பிட்டது போல ஹைக்கூ கவிதைகளில் காட்டப்படும் இயற்கை வெறும் இயற்கையல்ல! அது மனித வாழ்க்கை! இயற்கையை முன்னிறுத்தி மனித வாழ்க்கையை விமர்சிக்கும் எடுத்துரைப்பு முறைக்கு இக்கவிதை சிறந்த சான்றாக அமைகிறது.

ஹைக்கூ கவிதைகளில் வண்ணத்துப்பூச்சி தவிர்க்க முடியாத ஓர் அடிக்கருத்து ஆகும். எல்லா ஹைக்கூ கவிஞர்களையும் போலவே ரவியும் வண்ணத்துப்பூச்சியைப் பற்றிப் பாடிவிட்டார். இல்லாவிட்டால் அவரை ஹைக்கூ கவிஞர் என்று மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி விட்டால் என்ன செய்வது? இதோ ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பற்றிய கவிதை :

“பிடிக்க ஆசை
பிடிபடுவதில்லை
வண்ணத்துப்பூச்சி”

இக்கவிதை எளிய வண்ணத்துப்பூச்சியின் வலிமையை, அது வாழ்வதற்கான பொருத்தப்பாட்டினைப் பெற்றிருப்பதை உணர்த்து-கிறது. வலிமை மிக்க காளை பிடிபட்டு விடுகிறது. புலி, சிங்கம், யானை போன்ற வலிமை மிக்க விலங்குகள் மனிதனிடம் பிடிபட்டு விடுகின்றன. ஆனால் எளிமையும் மென்மையும் உடைய வண்ணத்துப்பூச்சியை அத்தனை எளிதாகப் பிடிக்க முடிவதில்லை. எனவே மனிதன் எளிமையும் மென்மையும் உடையவனாக இருப்பது சிறந்தது. அதனால் தீமை எதுவும் ஏற்பட்டு விடாது. இக்கருத்தினை மேலே காட்டப்பட்ட கவிதை குறிப்பாக உணர்த்துகிறது.

இயற்கையைப் பாடுவதைப் போல மனித வாழ்வின் அவலங்களையும் கவிஞர் ரவி பாடுகிறார். உலகத்தின் துன்பங்களிலேயே மிக ஆழமான துன்பம் துரோகத்தினால் ஏற்படும் துன்பம் ஆகும். ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள் தான் அதிக அழுத்தமான துன்பியல் உணர்வுகளைப் புலப்படுத்தியவை என்பது உலக வழக்கு? அதனால் ஒருவரால் துரோகம் இழைக்கப்பட்டவன் அடையும் துன்பத்துடன் ஒப்பிடும் போது ஷேக்ஸ்பியரின் துன்பியல்கள் மிகவும் சாதாரணமாகி விடுவதுண்டு. நாம் நல்லவர் என்று ஒருவரை எண்ணிக்கொண்டு இருக்க அவர் மறைமுகமாக நமக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை அறிகிறபோது நம் மனம் படும் பாட்டைச் சொல்லில் வடிக்க இயலாது. அதன் பிறகு துரோகம் இழைக்கப்பட்டவரின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத வகையில் நடந்தே விடும். உலக அரசியல் வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் இது தொடர்பாகக் கிடைக்கும். அரசியலில் மட்டுமல்லாமல் உயர்பதவிகளில் இருந்து வீழ்ந்தவர்களீன் கதைகளும் நமக்கு இதைத் தெளிவாகக் காட்டும். சாதாரண மனிதனுக்குக் கூட இவ்வாறு நடப்பது உண்டு. இந்த உணர்ச்சியைக் கவிஞர் ரவி பின்வருமாறு எடுத்துக்காட்டுகிறார்.

“உடன் வந்தாலும்
உண்மையில்லை
நிழல்”

இக்கவிதை ஒருவரின் மனத்தின் வலியை எவ்வளவு ஆற்றலுடன் எடுத்துக்காட்டுகிறது.

ஹைக்கூ கவிதைகள் – பொதுவாகப் புதுக்கவிதைகள் – ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மதிப்பீடுகளை கேள்விக்கு இடமாக்குகின்றன. உயிர்களை உயர்திணை, அல்லாத திணை என்று பகுப்பது இலக்கணம். மனிதனே இப்பகுப்பை உருவாக்கியதால் தன்னை உயர்திணையில் சேர்த்துக் கொண்டான். மக்கள், தேவர், நரகர் முதலியவர்கள் உயர்திணை என்றும் பிற எல்லாம் அல்லாதவை என்றும் பகுத்தான். இத்தகைய பருப்பு சரிதானா என்ற வினாவைக் கவிஞர் மனிதனை நோக்கி எழுப்புகிறார், இதோ அக்கவிதை :

“காட்டு விலங்குகள் ஒற்றுமையாய்
நாட்டு மனிதர்கள் வேற்றுமையாய்
உயர்திணை யார்?:

ஒரு வினாவின் மூலம் மனிதர்களை விட விலங்குகள் உயர்ந்தவர் என்பதை இக்கவிதையீல் காட்டுகிறார்.

மனிதர்களைத் தோல்வி என்பது செயலிழக்கச் செய்கிறது. ஆனால் சிந்திக்கத் தெரியாத விலங்கினங்கள் தங்கள் தோல்வியைப் பெரிதாக உணர்வதில்லை. அவை ஒரு தோல்விக்குப் பிறகு மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன. எனவே அல்லாத திணை எனப்படுபவை உண்மையில் உயர்திணை ஆக இருக்கின்றன. இதனை,

“சிதைத்த போதும்
கட்டத் தொடங்கியது
சிலந்தி”

என்ற கவிதையின் மூலம் கவிஞர் உணர்த்துகிறார்.

கவிஞர் இரா. ரவி சிறந்த படிமங்களையும் எடுத்தாண்டிருக்-கிறார். கலங்கரை விளக்கம் என்ற சொல்லைக் கேட்டவுடனே உயர்ந்தோங்கி நின்று வழிகாட்டும் ஒரு அமைப்பு நாம் மனக்கண்ணில் தெரியும். கலங்கரை விளக்கம் என்பது வழிகாட்டுதல், நீண்டு நெடிதாக நிற்றல் என்ற பண்புகளின் குறியீடாகத் திகழ்கிறது,

“ஓளியின் வழி
காட்டிடும் வழி
கலங்கரை விளக்கம்”.

மிகவும் நேரடியாக வெளிப்படையாகச் சில செய்திகளைச் சுட்டும்போது அவை ஆழ்ந்த சிந்தனைக்கு இடம் தராத தட்டைக் கவிதைகளாக அமைந்து விடுவது உண்டு. ரவியின் கவிதைகளில் சில கவிதைகள் தட்டையாக இருக்கின்றன என்பதாக என் மனத்தில் தோன்றுகிறது. சில கவிதைகள் மேலும் மாற்றம் பெறக்கூடியவையாகத் தோன்றுகின்றன. ஒரு கவிதையைச் சான்றாகக் காணலாம்.

“வெகு நாட்களாகி விட்டன
நேர்மை விடைபெற்று
அரசியல்”.

இதில் ரசனைக்குரிய இடமும் ஒன்றிருக்கிறது. “அரசியல்” என்ற சொல்லுக்குப் பதிலாக “வணிகம், நட்பு, அரசு, நிர்வாகம், கல்வி, பொதுப்பணிகள் என்று எந்தச் சொல்லையும் பொருத்தி கவிதையை நிறைவு செய்து கொள்ளலாம் .

ஹைக்கூ கவிதைகளில் ஒரு நிகழ்வு இருக்க வேண்டும். அது கவிதைக்குக் கூடுதல் சிறப்பு என்று ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா கூறினார். ரவியின் கவிதைகளில் சிலவற்றில் இப்பண்பு காணப்படுவது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சான்றாக ஒரு கவிதை :

“வெளியேற முடியாமல்
சிறை வைத்தது
மழை”

இக்கவிதையை நங்கு கவனித்தால் அதில் செயல் / செயலற்ற தன்மை இருப்பதை உணர்ந்து மகிழலாம்.

துளிப்பா என்ற வகையில் சில கவிதைகளை இத்தொகுப்பில் காண முடிகிறது.

பழமொழிகளை இணைத்து “பழ்மொன்றியு” என்ற வகையில் சில முயற்சிகள் செய்திருக்கிறார். தமிழில் ஏற்கனவே இருக்கிற பழமொழிநானூறு போல ஓரிரு கவிதைகளைக் காணலாம்.

“மருமகள் உடைத்தால்
பொன்குடம்
பொன்குடம் உடையுமா?”

“கற்றது கையளவு
கல்லாதது உலகளவு
தோல்வியுற்ற மாணவன்”

என்ற கவிதைகளில் மெல்லிய நகைச்சுவை உணர்வின் இழையோட்டத்தினைக் காண முடிகிறது. பொன்குடம் என்பதை நேரடியாக தங்கத்தினால் செய்யப்பட்ட குடம் என்று புரிந்து கொள்ளத் தேவையில்லை. பொன் போன்ற மதிப்பு வாய்ந்தது என்று தான் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டால் அதில் நகைச்சுவைக்கு இடம் இல்லை. எனவே பொன்னாலான குடம் என்று புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்கிறோம். கவிதையில் தருக்க அறிவை விட அனுபவமும் உள்ளுணர்வும் அதிகமாக உதவி செய்யும்.

கவிஞர் ரவி அவர்கள் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து கொண்டு கவிதைப் படைப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சிறந்த பேச்சாளர், அனைத்திற்கும் மேல் பல்வேறு பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் போன்றவர்களின் நட்பினைப் பேணி வரும் திறன் படைத்தவர்; அவர்களுக்கு உற்றுழி உதவி வருபவர்! பொதுச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உழைத்து வருபவர். என்னை ஒரு இலக்கிய விமர்சகராக நினைத்துக் கொண்டு அவருடைய இந்தத் தொகுப்பிற்கு ஒரு மதிப்புரை கேட்டார். எனக்குப் பொதுவாக இந்த முயற்சிகளில் அதிக ஆர்வம் கிடையாது. எனக்குத் தனிமையில் இருந்து அமைதியாகப் படிப்பதில் மட்டுமே விருப்பம் அதிகம் என்றாலும் கவிஞர் ரவியின் வேண்டுகோளை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனக்கு இருந்த பணிச்சுமைகள், உடல்நிலை முதலியவற்றின் காரணமாக இந்த மதிப்புரை எழுதுவது தாமதாமாகி விட்டது என்றாலும் “தன் முயற்சியில் சிறிதும் தளராத” கவிஞர் இரா. ரவி தொடர்ந்து எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக இப்போது மதிப்புரையினை எழுதி முடித்து விட்டேன்.

நிறைவாக ஒரு கருத்து. இத்தொகுப்பில் உள்ள நூற்றுக்-கணக்கான கவிதைகளுள் என மனத்தைத் தொட்டன பல உண்டு. மனத்தைத் தொடாதனவும் பல உண்டு. நான் என் மனம்கவர்ந்த சில கவிதைகளை இம்மதிப்புரையில் எடுத்துக்காட்டி உள்ளேன். இவை சிறிதளவு தேடித் தெரிவு செய்யப்பட்டவை. நான் எழுதியதில் என் மனச்சான்று முக்கியமானது. மற்றவர்களுக்கு வேறு சில கவிதைகளும் மனத்தைத் தொட்டனவாக இருக்கக் கூடும். மனிதர்கள் உருவ வண்ணங்களில் வேறுபட்டிருப்பதைப் போலவே ரசனைகளும் ஏற்படும். அது இயல்பு. எப்படியாக இருந்தாலும் ஒரு கவிஞரை ஊக்குவிப்பது நமது கடமைகளில் ஒன்று.

தமிழ்க்கவிதை உலகத்திற்கு இத்தொகுப்பு கூடுதலான அணி சேர்க்கிறது. இதில் நான் மகிழ்ச்சி அடைகிறறேன்.

கவிஞர் ரவி வாழ்க! அவருடைய படைப்பாற்றல் வளர்க!!

Please follow and like us:

You May Also Like

More From Author