புகையிலைக் கேட்டை ஒழி.

Estimated read time 1 min read

Web team

IMG_20240531_103659.jpg

புகையிலைக் கேட்டை ஒழி !

தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல் மாத இதழ் !
விலை ரூபாய் 60.

‘ மதுக்கடைகளை மூடு ‘ என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி அதனை நூலாக வெளியிட்டார்கள் .அதனைத் தொடர்ந்து ,
‘புகையிலைக் கேட்டை ஒழி’ என்ற தலைப்பில் 31.5.2013 அன்று புகையிலை ஒழிப்பு தின இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ,உரைகள் தொகுத்து நூலாக்கி சமுதாயத்திற்கு பயன் தரும் விதமாக வழங்கி உள்ளார்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் கவிஞர் வசீகரன் .

விழாவில் ஆற்றிய உரைகளில் இருந்து சிறு துளிகள் .

கவிஞர் கார்முகிலோன் உரை ;

பள்ளிச் சிறுவர்கள் கூட புகைக்கத் தொடங்கிவிட்டார்கள் .நவ நாகரிக யுவதிகள் ,புகைக்கிறார்கள் .ஆணும் பெண்ணும் சமம் என்று காட்ட எத்தனையோ நல்ல வழிகள் உள்ளனவே ! உயிர் பறிக்கும் புகையிலையை உபயோகிகத்தான் வேண்டுமா ?

கவிஞர் ஜெயபாஸ்கரன் ;

எனக்கு நானே ஏற்றுக் கொண்ட உறுதி மொழியின் அடிப்படையில் மிகப்பெரிய மனப்போராடதிற்குப் பிறகு மன உறுதியோடு நான் இதை விட்டொழிக்க முடியவில்லை என்றால் நீ பிறந்ததற்கு பயனே இல்லை .என்கிற மன உறுதியுடன் , அந்த சிகரெட்டை நான் கடைசியாக தூக்கிப் போட்டு மிதித்தேன் .

கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ;

நம்முடிய தமிழ்ச் சமூகத்தில் கேடு பயக்கின்ற அல்லது நம்மை மதிமயக்கம் செய்கின்ற போதைப் பொருகள்கள் குடும்பத்தை மட்டும் சீரழிக்கவில்லை , இந்தநாட்டையும் சீரழிக்கிறது .

மாதா டிரஸ்ட் திரு .கிருஷ்ணமூர்த்தி ;

புகையிலை புகைக்கும் வடிவமாக இன்றைய இளைஞர்களை அடிமைப்படுத்திக் கொள்கிறது .நண்பர்கள் சகவாசம் , ஒருமுறை எழுத்துப் பார்ப்போமே என்ற நப்பாசை ,தீய சகவாசங்களால் தொடங்கும் பழக்கம் வாழ்நாள் முழுவதும் பாடாய் படுத்துகிறது .

தொகுப்பாசிரியர் கவிஞர் வசீகரன் ;

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் எல்லோருடைய் ஆசையாகவும் இருக்கிறது .ஆனால் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளைச் சொன்னால் மட்டும் ஏன்தான் சிலர்க்குப் பிடிக்காமல் போகிறது என்பது தெரியவில்லை .
புற்று தந்திடும் புகையிலை ;
பற்று வைத்திடல் சரியிலை ;

புகையிலை உடல்நலத்தின் பகையில்லை !கவிஞர் அருகோ !

புற்றுநோயை இந்நாட்டில் புகஅழைத்த புகையிலை ;
கட்டுடலைச் சீர்குலைத்துக் கரியாக்கும் பகையில்லை
தொட்டுவிட்டால் விடமறுக்கும் தொந்தம் மிகு விசவலை
தொல்லைகளை எல்லையின்றித் தொடரவைக்கும் நச்சிலை

புகை நமக்குப் பகை ! கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் .

இம்மென்று பிறர் காக்கும் காப்பு என் செய்யும் ?
நம்நலத்தை நாம்தானே பேணவேண்டும்
தம் அடித்துத் தரம்கெட்டுப் போகலாமா ?
போம் என்றே புகைதனை ஒழித்துவிடல் நன்றேயன்றோ !

ஒரு புகையாளியின் வாக்குமூலம் ! கவிஞர் தமிழ் இயலன் !

புகையிலைத் தயாரிப்பு
நிறுவனங்களை இழுத்து மூடினால்
இழுத்து மூட ஏற்பாடு செய்தால்
கழுத்துப் போய்விடுமா உங்களுக்கு ?

நூலில் உள்ள கவிதைககள் கருத்துக்கள் யாவும் மிக நன்று .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக உள்ளன .பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு எழுதி உள்ளேன் .நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .புகைக்கும் பழக்கும் உள்ள உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழுங்கள் .புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த நூலை ஆழ்ந்து படித்தால் உறுதியாக புகைப்பதை விட்டு விடுவார்கள் என்று உறுதி கூறலாம் .

Please follow and like us:

You May Also Like

More From Author