பூ மழை!

Estimated read time 1 min read

Web team

IMG_20240304_105012.jpg

http://www.tamilauthors.com/04/527.html

பூ மழை!
ஹைக்கூ கவிதைகள் !
நூல் ஆசிரியர் : மலரடியான் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை – 18. பக்கம் : 64, விலை : ரூ. 50.

*****மரபுக் கவிதை மற்றும் சிறுவர் படைப்புகளிலும் தனி முத்திரை பதித்த கவிஞர் மலரடியான் அவர்கள் 40க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி இருந்தாலும் ‘பூ மழை’ முதல் ஹைக்கூ கவிதை நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள். இந்நூல் எழுதிட காரணமாக அமைந்த பதிப்பாளர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கும் பாராட்டுகள். மிக நேர்த்தியான வடிவமைப்பு, சிறப்பான பதிப்பு.
ஆரஞ்சு சுளைகள்
அதற்கேன் தீட்டுகிறீர்கள்
உதட்டுச் சாயம்!
‘உதட்டுச் சாயம் உடலுக்குக் கேடு தரும்’ என்று ஆய்வுகள் சொல்கின்றன. சாயம் வேண்டாம் என்று நேரடியாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதால் சுற்றி வளைத்து ஆரஞ்சு சுளைகள் போன்ற இதழ்களுக்கு எதற்கு சாயம் என்று கேட்டுள்ளார்.
நட்ட பயிர்கள் அழிகின்றன
மரண ஓலங்கள்
விவசாயி தற்கொலை!
கல் நெஞ்சம் படைத்த கர்னாடகம் தமிழகத்திற்கு தேவையான பொழுது தண்ணீர் திறந்து விடுவது இல்லை. அவர்கள் அணை நிரம்பி உடையும் தருவாயில் மட்டுமே தண்ணீர் திறப்பார்கள். ஆனால் தமிழக உழவர்களோ வயலில் பயிரை நட்டுவிட்டு தண்ணீர் இன்றி வாடி கருகும் போது நட்டம் அடையும்போது வாடியப் பயிரைக் கண்டு வாடிய வள்ளலாராக உழவர்கள் உயிரை மாய்த்து வருகின்றனர்.
மாறாத குரல்கள்
பாடிக் கொண்டே இருக்கிறது
குயில்!
குயில் ‘நேயர் விருப்பம்’ பற்றி கவலை ஏதுமின்றி அது சலிக்காமல் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கும். அக்காட்சியினை நம் மனக்கண் முன் கொண்டு வந்து காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் மலரடியான்.
சாதியில்லை மதமுமில்லை
காதலாகி கனிகிறது
அன்பு!
சாதி மதம் பணம் எதுவும் பாராமல் சிலருக்கு விபத்துப் போல காதல் மலருவதுண்டு. அதற்கு அன்பு ஒன்றே அடித்தளமாக அமைகின்றது. கற்காலம் தொடங்கி கணினிக் காலம் வரை காதல் அழிவின்றி வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
தாய்ப்பாலை மறுத்து
கள்ளிப்பாலை குடிக்கிறார்கள்
அயல்மொழி!
இன்றைக்கு தமிழகப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பெருகி விட்டது. அனைத்துப் பாடங்களும் ஆங்கில வழியில் பயின்றாலும் ஒரே ஒரு பாடம் மட்டுமாவது தமிழில் பயின்றார்கள். இப்போது தமிழை விட்டுவிட்டு இந்தி லத்தீன் பிரஞ்ச் என்று வேறு அயல்மொழிகளை படிக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. தமிழ்நாட்டில் தமிழ் படிக்க தமிழர்களுக்கு கசக்கின்றது.
தமிழின் அருமை பெருமையை உலகம் அறிந்து விட்டது வியந்து பார்க்கின்றது. ஆனால் தமிழின் பெருமையை உள்ளூர் தமிழன் தான் அறியாமல் மூடராக இருக்கின்றனர். திருந்துவது எந்நாளோ? இப்படி பல சிந்தனைகளை விதைத்தன.
இரவெல்லா முழக்கம்
விடிந்ததும் உறக்கம்
தவளைகள்!
இந்த ஹைக்கூ கவிதை தவளைகளுக்கு மட்டுமல்ல, இன்றைய பல இளைஞர்களுக்கும் பொருந்தும். அலைபேசியில் இரவெல்லாம் கழித்துவிட்டு அதிகாலை என்பதையே அறியாமல் பகலில் தூங்கும் சோம்பேறிகள் பெருகி விட்டனர்.
தண்ணீர் தேவையில்லை
தழைத்து வளர்கிறது
ஊழல்!
உண்மைத்தான். தானாக வளர்கிறது எங்கும் எதிலும் ஊழல். கழிவறை கட்டாமலே ஊழல் செய்து விட்டனர். நிவாரணம் வழங்கினால் அதிலும் ஊழல். கட்டிடம் கட்டிய, பெயர் மாற்றிட என மாநகராட்சியில் தலைவிரித்து ஆடும் ஊழல். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் போட்டிப் போட்டு ஊழல் செய்து வருகின்றனர்.
எல்லாமே குழப்பம்
ஒன்றுமே புரியவில்லை
புதுமைக் கல்வி!
புதுமைக் கல்வி புரியாத கல்வியாகவே உள்ளது. தாய்மொழியில் இல்லாத அயல்மொழிக் கல்வி சுயமாக சிந்திக்கும் ஆற்றலைத் தரவில்லை. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கருவிகளாக மாணவர்களை மாற்றி வருகின்றது.
பிறப்பு இறப்பில்லை
உயிரோடு இருக்கிறது
புத்தகம்!
மனித குலத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான புத்தகம் பற்றி மிக மேன்மையாக எழுதியது சிறப்பு, பாராட்டுக்கள்.
தானமாகக் கொடுங்கள்
மருத்துவ ஆராய்ச்சிக்கு
உடலையாவது!
முற்போக்காளர்கள் பகுத்தறிவாளர்கள் பலர் உடலை தானமாக எழுதி வைத்து இறந்தபின் அதனை நிறைவேற்றியும் வருகின்றனர். மருத்துவ மாணவர்களுக்கு அந்த உடல் கற்பதற்கு பேருதவியாக உள்ளது. இருக்கும் போது எந்தவித தானமும் செய்யாமல் கருமியாக இருந்தாலும் இறந்த பின்பாவது தானம் தந்திட உடல் தானம் செய்யுங்கள் என்று வைத்த வேண்டுகோள் நன்று.
காக்கையின் வீட்டில்
புதிய விருந்தாளி
குயில் குஞ்சு!
காக்கைக்கு குயில் தன் குஞ்சு இல்லை என்ற போதும் வெறுக்காமல் அன்பு செலுத்தும். அதனால் தான் ‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற பழமொழியும் வந்தது. குயிலுக்கு குஞ்சு பொறிக்கத் தெரியாத காரணத்தால் காக்கைக்கு தெரியாமல் குயில் முட்டை வைத்து விட்டாலும் அதனையும் அடைகாத்து குஞ்சாக்கும் காகம். பெரிய உள்ளம் கொண்டது. காகத்தின் நிறம் தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை.
அடகு போகிறது
ஆண்மை
வரதட்சணை!
வரதட்சணை பற்றி பலரும் எழுதி உள்ளனர். கவிஞர் மலரடியான் அடகு போகிறது ஆண்மை என்ற புதிய சொல்லாட்சியைப் பயன்படுத்தி வரதட்சணை வாங்கும் மணமகனுக்கு புத்திப்புகட்டி உள்ளார்.
.

Please follow and like us:

You May Also Like

More From Author