பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து பார்ப்போம்!

Estimated read time 0 min read

பொங்கல் பண்டிகை என்பது வாழையடி வாழையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாள் ஆகும். அதற்கு சாட்சியாக இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து ஏராளமான அரிய தகவல் கொட்டி கிடக்கின்றன.

பண்டைய காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் மார்கழி மாதத்தில் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழி மாதத்தில் அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வருவர்.

மார்கழி மாதம் முடிந்து தை மாதம் முதல் நாளை உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவி புரிந்த இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாக தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடினர். அந்த நாளில், தாங்கள் அறுவடை செய்த நெல்லைக் கொண்டு புது பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படையலிட்டு வழிபாடு செய்வர். மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வர்.

பொங்கல் பண்டிகை குறித்தும், தை முதல் நாள் சிறப்புகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் ஏராளமான பாடல்கள் உள்ளன. அந்த வகையில், “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை பாடல்களிலும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை பாடலிலும், “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று புறநானூறு பாடலிலும், “தைஇத் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு பாடலிலும், தை மாத நீராடல் பற்றிய குறிப்புகள் இருப்பதால், சங்ககாலம் தொட்டே, தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

போகிப்பண்டிகை, பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகையின் நான்கு நாட்களுமே இப்போதும்கூட சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author