மதிப்புரை.திருமதி.இர.ஜெயப்பிரியங்கா

Estimated read time 1 min read

Web team

IMG_20240525_115238.jpg

ஆயிரம் ஹைக்கூ !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 184, விலை : ரூ. 120.

கவிஞர் இரா. இரவி. அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015ல் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே என்னை கவிதைகள் எழுத ஊக்கப்படுத்தியது. அய்யா அவர்களின் 12-ஆவது நூல் ஆயிரம் ஹைகூ. நீண்ட நாள்களாக வாங்க நினைத்த நூல். குருவின் கையில் இருந்தே நூலைப் பெற்று நூலுக்கு மதிப்புரை எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

நூலின் முன் அட்டைப்படத்தில் திருவள்ளுவரின் படமும் பின் அட்டைப்படத்தில் கவிஞரின் சுயவிபரமும் கொடுக்கப்பட்டுள்ளது. நுhலின் அணிந்துரைக்கு அழகு சேர்க்கும் இரு சான்றோர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் அவர்களும், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களும் ஆவர். நூலின் தனிச்சிறப்பாக கவிஞர் என்னுரையில் தனது முந்தைய ஹைக்கூ கவிதை நூல்களில் பலவற்றிலிருந்து தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் தேர்வு செய்து சிறப்பு வாய்ந்த ஹைக்கூ கவிதைகளையும் பின்னர் எழுதிய புதிய ஹைக்கூ கவிதைகளையும் தொகுத்துத் தர ஆயிரம் ஹைக்கூ நூலாக மலர்ந்துள்ளது.

நூலின் பின்னிணைப்பாக கவிஞர் இரா. இரவி அவர்களின் படைப்புகள் மற்றும் ‘தி ஹிந்து’ நாளிதழில் கவிஞரின் நேர்முகம் இடம் பெற்றுள்ளது. இந்நூல் மூன்று பதிப்புக்களை கண்டுள்ளது. இனி ஆயிரம் ஹைக்கூக்குள் செல்வோம்.!

மூத்த மொழி , முதல் மொழி, ஆதியில் பிறந்த நம் தமிழ்மொழி பற்றி நூல்.

“தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா.!”

“பல்லாயிரம் வயதாகியும்
இன்னும் இளமையாக
தமிழ்.!”

என்று தமிழின் பெருமை குறித்து நூல் எடுத்துரைக்கின்றது.

சமூகத்தில் நிலவும் அவலநிலை குறித்து:

“உள்ளூரில் இனவெறி
வெளிநாட்டில் நிறவெறி
உலக அமைதி கேள்விக்குறி?”

ஹைகூ மூலம் நூல் சமூக அவலம் சுட்டுகின்றது.

நூல் முற்போக்கு சிந்தனைகள் ஹைக்கூ வழி நம் சிந்தைக்கு

“தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் சரி
ஆலயங்கள் எதற்கு?’

‘கம்பி எண்ணுகிறார்
விடுதலைக்கு ஏங்கி
குறி சொன்ன சாமியார்

‘கடவுளின் முன்னே
அனைவரும் சமம்
சிறப்பு தரிசனம்?’

இன்றைய நூற்றாண்டில் மனிதனிடம் இல்லாத மனிதநேயம் குறித்து நூல்.

‘உலகெலாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்!”

‘குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம்!’

‘மனிதாபிமானற்ற
மடச்செயல்
தூக்குத் தண்டனை!”

நம் நாட்டின் அரசியல் அவலமாக நூலில்,

‘சின்ன மீன் போட்டு
சுறாமீன் பிடிப்பு
அரசியல்!”

‘அன்று இருந்தது
இன்று இல்லை
அரசியல் நாணயம்!’

‘இராமாயணத்தில் கூனி
மகாபாரதத்தில் சகுனி;
நாட்டில் அரசியல்வாதிகள்!’;

“தெரிந்தே
ஏமாறும் நாள்
தேர்தல் நாள்!”

இயற்கை குறித்து நூலானது,

‘கட்டணம் வாங்காத
திறந்தவெளிப் பல்கலைக்கழகம்
வானம்!’

‘மரபுக் கவிதை
வானத்தில்
நிலவு!’

‘அய்யகோ
வானத்திலும் சுரண்டலா
பிறை நிலவு.!’

‘ரசிப்பதும் சுகம்
நனைவதும் சுகம்
மழை!’

கவிபாடும் அனைவரும் காதல் கவிபாடுவது உண்டு.அதன் அடிப்படையில் சிலகாதல்கவிகளை கவிஞர் நூலில் பதிவு செய்துள்ளார்.

‘இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்!

‘பிரிந்து
பின் சந்தித்தால்
சுவை அதிகம்!’

‘கர்ணனின் கவசமாய்
காதலி நினைவு
கடைசி வரை!’

இன்றைய இருபத்திஓராம் நூற்றாண்டில் வாழ்வியல் விழுமியம் குறைந்தும் மறைந்தும் வருகின்றது. இது பற்றி நூலானது

“முதியோர் இல்லத்தில் பெற்றோர்
வேரை மறந்த விழுதுகள்
மகன்கள்!”

“பிறர் சேமிப்பை
அபகரித்தான் மனிதன்
தேன்கூடு!”

“நியாயத்தை
விற்கக் கடையா?
நியாயவிலைக் கடை!”

அன்று தரமாக இலவசமாக வழங்கப்பட்ட கல்வி இன்று வணிகமானது குறித்து நூலானது.

“ஆரம்பமானது
பகல் கொள்ளை
கல்வி நிறுவனங்கள்!”

‘அன்று தொண்டு
இன்று கொள்ளை
கல்வி நிறுவனங்கள்!’

தொலைக்காட்சியின் தீமைக் குறித்து நூலானது.

“பொழுதுபோக்கக் கண்டுபிடித்தது
பொழுதை விழுங்குகின்றது
தொ(ல்)லைக்காட்சி!”

“அழியும் அன்பு
வளரும் வம்பு
தொடர்கள்!”

“மாற்றுங்கள் பெயரை
தொலைக்காட்சியன்று
தொல்லைக்காட்சி என்று!”

ஹைகூ கவிதைகளின் கூகுளான கவிஞர் ஹைகூ கவிதைப் பற்றி தம் ஹைகூ மொழியில்.

“கணினி யுகத்தின்
கற்கண்டு
; ஹைகூ!”

“உருவத்தில் கடுகு
உணர்வில் இமயம்
ஹைகூ!”

“சிந்தனைச் சிற்பி
செதுக்கிய சிலை
ஹைகூ!”

மாற்றுத்திறனாளிகளின் தனித்திறன்கள் குறித்து நூலானது.

“மனிதநேயம் மிக்கவர்கள்
உதவிடும் உள்ளம் பெற்றவர்கள்
மாற்றுத்திறனாளிகள்!”

“வாய்ப்பு வழங்கினால்
வெற்றி பெறுவார்கள்
மாற்றுத்திறனாளிகள்!”

தற்போது அலைபேசி கோபுரம் மூலம் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருவதை நூல்

“புகைப்படம் எடுத்து வைப்போம்
பேரன்களுக்குக் காட்ட
குருவிகள்!”

நூலின் இறுதியாக நூல் பொதுவியல் கருத்துக்களாக சில ஹைகூ கவிதைகளை முன்வைக்கின்றது.

“நீட்டிக்கச் சொன்னார்கள்
திருமண வாழ்த்துரை
சமையல் முடியும் வரை!”

“விரல் நுனியில்
விரிந்தது உலகம்
இணையம்!”

“பணக்காரர்களுக்கு அருகில்
ஏழைகளுக்கு தூரத்தில்
கடவுள் தரிசனம்!”

“சரியான ஆட்டம்
பெயரோ
தப்பாட்டம்!”

“வெகு நாட்கள் இல்லை
அருங்காட்சியகத்தில்
அரிசி!”-

ஆயிரம் ஹைக்கூ நூல் கவிஞரின் நூல்களில் உள்ள ஹைகூ கவிதைகள் தொகுக்கப்பட்ட பன்முகபார்வையான செம்மை பொருந்திய இனிய நூல்.
.

Please follow and like us:

You May Also Like

More From Author