மதிப்புரை நீதியரசர் கற்பக வினாயகம்

Estimated read time 1 min read

Web team

nkn4.jpg

‘ஆயிரம் ஹைக்கூ’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி.
*****
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

அன்பிற்கினிய இரா. இரவி அவர்களுக்கு,
வணக்கம்!
தாங்கள் அனுப்பிய ஆயிரம் ஹைக்கூ புத்தகம் கிடைக்கப் பெற்றேன். படித்தவுடன் எனது மதிப்புரையை அனுப்புமாறு கேட்டிருந்தீர்கள். மகிழ்ச்சி.
நான் மலேசியா பயணம் முடித்துவிட்டு, 18ஆம் தேதி இரவு
9 மணியளவில் தில்லி வந்து சேர்ந்தேன். மறுநாளே நீதிமன்றப்பணி காரணமாக சென்னை சென்று 21ஆம் தேதி இரவு தான் தில்லி திரும்பினேன். அதன் பிறகுதான் புத்தகத்தைப் படிக்க முடிந்தது.
எனவே தான் தாமதம்.
இது தான் எனது மதிப்புரை.
“தங்களின் ஹைக்கூ கவிதைகளில் எதார்த்தங்களையும், சமுதாய உண்மைகளை அழகாகவும் சுவையாகவும் பல தலைப்புகளில் பதிவு செய்துள்ளீர்கள்.”
படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணம் இது தான்.
“ஆயிரம் நிலவுகளை அடுக்கி வைத்திருக்கிற ஆகாய வெளி” தான் இந்தக் குறுங்கவிதைப் புத்தகம்.
“அத்தனையும் பௌர்ணமிகளாய் பூத்துக்குலுங்கி புத்துணர்ச்சி அளிக்கும் கருத்தோவியங்கள்; சமுதாய மேம்பாட்டிற்கு அடிகோலுகிற ஆழமான செய்திகள்”.
எனக்கு மிகவும் பிடித்த சில பதிவுகள் இதோ:
பல்லாயிரம் வயது தமிழுக்கு. இருப்பினும் இன்னும் இளமை!
முடியாதது முடியும்; நடக்காதது நடக்கும்; எப்போது? நம்பிக்கை வைக்கும் போது.
செடி வளர்த்தோம் ; கொடி வளர்த்தோம் ; மனித நேயம் வளர்த்தோமா?
மதங்களை விட உயர்வானது மனிதம்!
குஞசு மிதித்து கோழிகள் காயம் ; இடம் முதியோர் இல்லம்.
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் அரசியல்வாதி நாட்டைக் கெடுத்தான்!
விதைத்த விதை விருட்சமானது; தூங்கிவிட்ட விதை குப்பையானது.
மூச்சு உள்ளவரை முயற்சி; முயற்சி உள்ளவரை மூச்சு; வெற்றி உறுதி!
பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை; நாம் வாழ்ந்த அடையாளத்தை விட்டுச் செல்வது தான் வாழ்க்கை!
உருகிடும் மெழுகு ; உறைந்திடும் அழகு ; “அம்மா”!
மாதா, பிதா, குரு ; ஒரே வடிவில் மனைவி!
அப்பா வலக்கை; அம்மா இடக்கை ; மனைவியோ இதயம்!
அசலை வென்றது நகல். “செயற்கைச்செடி”!
இந்த கடைசி செயற்கைச்செடி கவிதை எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்துகிறது! இது தான் கதை!
அமெரிக்க நாட்டில் “சார்லி சாப்ளின்” என்கிற நகைச்சுவை நடிகர் மிகப் பிரபலமாக விளங்கினார். அமெரிக்காவிலுள்ள பெரிய நகரத்தில் ஓர் அமைப்பு ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பல போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஒரு போட்டி “மாறுவேடப் போட்டி”.
சார்லி சாப்ளின் போல மாறுவேடம் அணிந்து வர வேண்டும். அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகளும், ஒரு ஆறுதல் பரிசும் உண்டு. இந்த போட்டியில் கலந்துகொள்ள ஆயிரமாயிரம் பேர் குழுமியிருந்தார்கள். அனைவரும் சார்லி சாப்ளின் போல் உடை அணிந்து மாறுவேடத்தில் வந்தார்கள். போட்டி ஆரம்பமானது! ஒவ்வொருவரும் சார்லி சாப்ளின் போல சிறிது நடித்துவிட்டு கைதட்டலோடு வெளியேறினார்கள்.
கடைசியில் மூன்று பேருக்கு பரிசு தரப்பட்டது!. முதல் பரிசு பெற்றவருக்கு ஏகப்பட்ட கைதட்டல்! இரண்டாம் பரிசு பெற்றவருக்கு நிறைய கைதட்டல்! மூன்றாம் பரிசு பெற்றவருக்கும் கைதட்டல்! ஆறுதல் பரிசு பெற்றவர் வந்தார். கைதட்டலே இல்லை.
வாடிய முகத்துடன் அமைப்பாளர்களிடம், அந்த அரங்கிலே இரண்டு நிமிடம் பேச அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தது! பேசினார்.
“அன்பர்களே! முதல் பரிசு பெற்றவருக்கு ஏகப்பட்ட கைதட்டல்! இரண்டாவது பரிசு பெற்றவருக்கு நிறைய கைதட்டல்! மூன்றாவது பரிசு பெற்றவருக்கு குறைவான் கைதட்டல்! எனக்கு மட்டும் கைதட்டலே இல்லை. ஏன்?
எனக்கு ஆறுதல் சொல்வதற்காகவே ஆறுதல் பரிசு மட்டும் கொடுத்தார்கள். ஆறுதல் பரிசாவது கிடைத்ததே என்ற ஆறுதல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இன்னொன்றையும் இந்த அரங்கில் சொன்னால் தான் எனக்கு முழு ஆறுதல் கிடைக்கும்! அது ஒரு ரகசியம்! அந்த ரகசியத்தை இப்போது வெளியிடுகிறேன்.
உண்மையான சார்லி சாப்ளின் நான் தான். என்னைக் கண்டுபிடிக்கிறீர்களா? என்பதைக் கண்டறியத்தான் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டேன். மாறுவேடம் போடாத எனக்கு ஆறுதல் பரிசு! போலியான சார்லி சாப்ளின்களுக்கு மூன்று பரிசுகள். நான் அசல். பரிசு வாங்கியவர்கள் நகல்கள். இந்த அசலை வென்றுவிட்டது அந்த நகல்கள். எனவே, “நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் என்பது தான் பாடம்”!
இதைச் சொல்லிவிட்டு உண்மையான சார்லி சாப்ளின் மேடையை விட்டு இறங்கியபோது அவருக்கு பலத்த கைதட்டல்!
தங்களின், ‘அசலை வென்ற செயற்கைச்செடி’ என்ற குறுங்கவிதைக்கு இந்த கதை மிகப் பொருத்தமாக உள்ளது. உலக நடப்பை ஒரே வரியில் சொல்லியிருந்தீர்கள்.
நிறைய எழுதுங்கள். தங்களின் எழுத்துக்கள் படித்தவர்களை எழச் செய்யட்டும்!
போதையில் கிடக்கிற இலட்சக்கணக்கான இளைஞர்களையும், சோர்ந்து சோம்பிப் படுத்துக்கிடக்கிற ஆயிரமாயிரம் வேடிக்கை மனிதர்களையும் தட்டி எழுப்பட்டும்!
மொழி அழகையும், இயற்கை அழகையும், பெண்ணழகையும் போற்றிப் பாடுவதற்கு ஏற்கனவே ஆயிரமாயிரம் கவிதைகள் இருக்கின்றன. அவைகள் போதும்.
இனி வரும் இலக்கியங்கள் படிப்பவர்களை தூக்கி நிறுத்த வேண்டும்! தொடர்ந்து எழுதுங்கள்! தங்களின் எழுத்துக்கள் படுத்துக் கிடப்பவரை எழுப்பி நடக்க வைக்க வேண்டும். அவர்களின் உள்ளத்தில் சமூக அக்கறையை ஏற்படுத்தி சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வைக்க வேண்டும்.
படுத்துக்கிடப்பது ஒரு சுகம்.
ஆனால், எழுந்து நடப்பது வாழ்க்கை தரும் வரம்.
என்ற உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
பாராட்டுக்கள்! இந்த ‘குக்கூ’ கவிதைகள் உண்மைகளை பிரதிபலிக்கிற உண்மையான சார்லி சாப்ளின்.
தங்களது எழுத்துப்பணி எழுச்சியுடன் தொடர, வெற்றி பெற எனது இதயம் தோய்ந்த வாழ்த்துக்கள்!
வணக்கம்! நன்றி.

Please follow and like us:

You May Also Like

More From Author