மாணிக்கனார்.

Estimated read time 1 min read

Web team

IMG_20240326_161323.jpg

தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்!

நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்!

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம் 23 தீனதயாளு தெரு, தியாகராயர் நகர்
சென்னை 600 017 பக்கம் 230 விலை ரூ150.

******
பொய் சொல்லாத மாணிக்கம் என்று பெயர் பெற்ற தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் கொண்டாடி வரும் வேளையில் அவர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்துள்ள அரிய நூல்.

இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து மிகச் சிறந்த ஆளுமையாளர் வ.சுப. மாணிக்கனார் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இலக்கிய இணையர் என்று பெயர் பெற்ற தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணையராகவே இந்த நூலை வடித்துள்ளனர். பதிப்புகளில் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.

நூல் வாழ்க்கைக் குறிப்புடன் தொடங்கி உள்ளார். கவியரசர் முடியரசன் கவிதை மிக நன்று. 10 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.

கவிதையின் சிறு துளி!

மாணிக்கப் புலவன்! கவியர்சர் முடியரசன்!

நண்பன் பண்பன் நயத்தகு தமிழைக்
கண்ணென உயிரெனக் கருதும் இயல்பினன்
கல்வியைத் தமிழ்க் கற்கத் தடையெனில்
அவ்வினை யதுதான் அழிகவென் நெழுந்து !

மேற்கோள் காட்டி உள்ள நான்கு வரிகளே
வ.சுப. மாணிக்கனாரின் சிறப்பியல்பை எடுத்து இயம்புவதாக உள்ளது. வ.சுப. மாணிக்கனார் அவர்களின் புதல்விகள் திருமதி மாதுரி வெள்ளையப்பன், திருமதி தென்றல் அழகப்பன் இருவரும் இலக்கிய இணையர் இல்லம் வந்து தந்தையின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த அன்று நானும் இல்லம் சென்று இருந்தேன்.

என்னிடமும் வேண்டுகோள் வைத்தனர். அன்று முதல் வ.சுப.மாணிக்கனார் பற்றிய செய்திகள் எது வந்தாலும் உடன் வலைப்பக்கத்திலும் முகநூலிலும் பரப்பி வருகிறேன். எனது முகநூல் நண்பர். திருமதி தென்றல் அவர்களின் கணவர் அழகப்பன் அவர்கள் என் பதிவுகளை உடன் அவரது பக்கத்திற்குப் பகிர்ந்து விடுவார். நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் கலைமாமணி ஞானசம்பந்தன் மற்றும் புகழ்பெற்ற கவிஞர்களான அப்துல் ரகுமான் , மேத்தா , தற்போது காலமான இன்குலாப் வரை பயின்ற தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா நடந்தது .படங்கள் எடுத்து முகநூலில் பதிந்தேன் .அவரது பக்கத்திற்குப் பகிர்ந்தார். இந்த நூல் விமர்சனத்தையும் பகிர்வார்.

தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் மிகவும் நேசிப்பது மு.வ. அதற்கு அடுத்த படியாக மிகவும் நேசிப்பது வ.சுப. மாணிக்கனார். ‘கரும்பு தின்னக் கூலி தேவை இல்லை’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப அவரது நூறாண்டு விழா கொண்டாட்டங்களுக்கும் நூல் வெளியிடு-களுக்கும் துணை நிற்பது மட்டுமின்றி வாழ்ந்து உடலால் மறைந்தாலும் தமிழ் ஆர்வலர்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து வரும் மாமனிதருக்கு மகுடம் சூட்டும் விதமாக இந்த நூலை இலக்கிய இணையர் வடித்துள்ளனர். பாரட்டுகள். மாணிக்கத் தமிழ்.

தமிழ் இலக்கிய உலகில் மிக உயரிய ஆய்வு நூல்களாகக் கருதப்பெறும் ‘தமிழ்க் காதல்’ ‘வள்ளுவர்’‘கம்பர்’ போன்றவை அவர்தம் உயரியப் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்வை.

பேராசிரியர், துணை வேந்தர் போன்ற பதவிகளில் இருந்த போதும், மு.வ. அவர்களைப் போலவே படைப்பாற்றலும் வ.சுப. மாணிக்கனார் முத்திரைப் பதித்தார் என்பதை அறிய மகிழ்வாக இருந்தது. இன்றைக்கு, தான் உண்டு தன் கல்லூரி உண்டு என்று இருக்கும் பேராசிரியர்கள் படைப்பாற்றலின் கவனம் செலுத்திட வேண்டும். அப்போது தான் மறைந்த பின்னும் வ.சுப. மாணிக்கனார் போல பேசப்படுவீர்கள் எழுதப்படுவீர்கள் என்பதை உணர வேண்டும். வ.சுப. மாணிக்கனார் வாழ்வு சாதாரண வாழ்வு அல்ல சாதனை வாழ்வு..நேர்மையான வாழ்வு. தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர் .

தமிழ்வழிக் கல்வி என்பது இன்று தமிழகத்தில் அழிவு நிலையில் உள்ளது. ஆனால் அன்றே வ.சுப.மாணிக்கனார் தமிழ் வழிக் கல்வி மீது கொண்ட அளப்பரியப்பற்றிணை வைத்து இருந்ததை இந்த நூலின் மூலம் அறிந்து கொண்டேன். அவர் இன்று இருந்து இருந்தால் இன்றைய தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியின் நிலை கண்டு வேதனை அடைந்து இருப்பார்.

தமிழ்வழிக்கல்வி தமிழ் மீது கொண்ட அளப்பரிய அக்கறையாலும் ஈடுபட்டாலும் தமிழ்வழிக்கல்வியைத் தமது இறுதி மூச்சு வரை மாணிக்கனார் வற்புறுத்தி வந்தார். அதன் தொடக்க முயற்சியாக, மேலைச் சிவபுரியில் தமிழ்வழி மழலையர் பள்ளியை அவர் நிறுவினார். இப்படி பல அரிய தகவல்களை அறிந்திட வாய்ப்பாக வந்துள்ள அரிய நூல்.

தொல்காப்பியம் ‘இலக்கண இலக்கியம்’ என்ற முதல் கட்டுரையில் வ.சுப. மாணிக்கனார் எழுதிய ‘தொல்காப்பியக்கடல்’ என்ற நூலின் ஆய்வுக் கட்டுரையாக அமைந்துள்ளது. தொல்-காப்பியத்தின் சிறப்பையும் வ.சுப.மாணிக்கனாரின் எழுத்தாற்றலை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது.

நாம் இருவர் நமக்கு இருவர் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பன குடும்ப நலத்திட்ட விளம்பரக் குரல்கள் நமக்கு ஒருவர் என்று சொல்லும் போது ஒருவர் என்பது ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் பொதுவாகப் பயன்படுகின்றது. நமக்கு ஒருவர் என்று சொன்னாலும் ஒருத்தி என்று சொன்னாலும் கருத்துத் தவறாகும். இருபாற் குழந்தையையும் பொதுவாகவும் சமமாகவும் குறிப்பதற்கு ‘நமக்கு ஒருவர்’ என்ற சொல்லை இவ்விடத்து ஆள்கின்றோம்.

இன்று ‘நாமே குழந்தை நமக்கு எதற்கு குழந்தை’ என்ற நிலைக்கு சில இணையர்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

அகத்திணையின் பெருமைகள் பற்றி வ.சுப. மாணிக்கனார் கருத்து இதோ!

‘காதலையும் அதன் உணர்வையும் அதன் கல்வியையும் தெரிய வேண்டின். தமிழ்ப் பேரினம் கண்ட அகத்திணையை நாடுக. நெறியாகவும் அளவாகவும் உரமாகவும் நாணமாகவும் கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழிற்தான் உண்டு’.

இன்றைய காதலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய வைரவரிகள். இப்படிப் பட்ட உயர்ந்த இலக்கியம் தமிழில் மட்டும் தான் உண்டு தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழ்ர் யாவரும் பெருமை கொள்வோம். உன்னத இலக்கியத்தை உலகிற்கு தந்த மொழி தமிழ் மொழி. வ.சுப. மாணிக்கனாரின் படைப்புகளை ஆய்வு செய்து வடித்துள்ள அற்புத நூல். எல்லோருக்கும் அவரது படைப்புகளை வாசிக்க வாய்ப்பு இல்லை. இந்த நூலின் வழி அவரது படைப்பாற்றலை உணர வைத்துள்ளனர் இலக்கிய இணையர்.

வ.சுப.மாணிக்கனார் எழுதிய நூல்கள் பட்டியல் நூலில் உள்ளது. அது மட்டுமல்ல எழுதிட அவர் திட்ட மிட்ட நூல்களின் பட்டியல் கண்டு வியந்து போனேன். அவரது நூற்றாண்டை முன்னிட்டு மாணிக்க மொழிகள் நூறு நூலில் உள்ளன. அவற்றிலிருந்து சிறு துளிகள் இதோ!

என் தாய்மொழியாம் செந்தமிழுக்குப் பெருவளஞ்சேர்க்க வேண்டும் என்பது என் தலையாய குறிக்கோளுள் ஒன்று.

என் பிறப்பு பெருந்தொண்டுடையதாக வேண்டும் என்பது என் விளைவு.

நான் உலகிற்கு வழங்க எண்ணிக் கொண்டிருக்கும் பொருள் இரண்டே; வாய்மை, தற்சிந்தனை.

வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்வில் வாய்மையை வாழ்வியல் நெறியாக வாழ்ந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டுகள் செய்து சிறந்த மாமனிதர் வ.சுப.மாணிக்கனார்.அவர்களுக்கு சூட்டிய மாணிக்க மாலை இந்நூல்.(இலக்கிய இணையினருக்கு பாராட்டுகள்.

Please follow and like us:

You May Also Like

More From Author