விழிப்புணர்வு.

Estimated read time 1 min read

Web team

IMG-20240414-WA0087.jpg

விழிப்புணர்வு !
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
*****
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு அருமை. விழிப்புணர்வு என்ற தலைப்புக்கு ஏற்றபடி இருளில் மூழ்கி விடாமல் விழித்துக் கொள்ள ஒளி காட்டுவது போலவும், தீங்குகளை தயக்கம் இன்றி கொளுத்தி விட வேண்டும் என்பது போலவும் விரல்களில் தீக்குச்சி ஏந்திய அட்டைப்படம் சிறப்பு.

புதுகைத் தென்றல் என்ற மாத இதழ் 2003ஆம் ஆண்டு தொடங்கி தொய்வின்றி வந்து கொண்டிருக்கிறது. இதழ் நடத்துவது என்பது எதிர்நீச்சல் போல தான். நூலாசிரியர் எழுத்தாளர் மு. தருமராசன் அவர்கள் பாரத மாநில வங்கியில் அதிகாரியாக இருந்தவர். சங்கப் பணிகளில் அங்கம் வகித்தவர். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் என்று ஓய்வு எடுக்காதவர். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும், நானும் சென்னை சென்ற போதெல்லாம் அவருடையில் மகிழுந்தில் பல நாள் பயணம் செய்துள்ளோம். அவரே ஓட்டி வருவார்.

நல்ல பண்பாளர், இவரது வெற்றிக்கு இவரது மனைவி பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களும் துணை நிற்கிறார். சென்னையின் இலக்கிய இணையர் இவர்கள். நூலாசிரியர் எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் அவர்கள் சென்னைக்குச் சென்று பல ஆண்டுகள் ஆன போதும் சென்னைக்காரர்கள் போல இயந்திரமயமாக்கல் இன்னும் மண் மணக்கும் புதுக்கோட்டைக்காரராகவே வாழ்ந்து வருபவர். அன்பானவர். சமரசம் செய்து கொள்ளாத நெறியாளர்.

புதுகைத் தென்றல் இதழில் மாதாமாதம் தவறாமல் படித்த தலையங்கம் என்ற போதும் மொத்தமாக நூலாக்ப் படித்த போது மட்டற்ற மகிழ்ச்சி. சமுதாயத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை அசை போட்டுப் பார்க்க உதவிய நூல். மகாகவி பாரதியாரின் வைர வரிகள் போல நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன், ரௌத்திரம் பழகி துணிவுடன் வடித்திட்ட தலையங்கங்களின் தொகுப்பு. இதழியல் படிக்க்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைத்திட இந்நூலை பரிந்துரை செய்கின்றேன்.

ஒரு தலையங்கத்திற்கு எப்படி தலைப்பு வைக்க வேண்டும், தொடுப்பு, எடுப்பு, முடிப்பு – எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ள நூல். சுருக்கமாகவும், செறிவாகவும் இருப்பது தனிச்சிறப்பு.

முதுபெரும் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது. அணிந்துரை வழங்கியவரே மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவிற்கும் வருகை தந்து நூல் குறித்து சிறப்புரையாற்றியது சிறப்பு. அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. பதிப்பாளர், பேராசிரியர் பெ. அர்த்தநாரீசுவரன் அவர்களின் திறனாய்வு பார்வையும் தீர்க்கமான பார்வையாக உள்ளது. வங்கி ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு வீட்டில் ஓய்வாக ஒதுங்கி விடும் சராசரி மனிதராக வாழாமல், வாழும் வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள தரமான மாத இதழை நடத்தி வரும் மாண்பாளர் நூல் ஆசிரியர் மு. தருமராசன் அவர்கள்.

பிரபல வார இதழ்களே விற்பனை எண்ணிக்கை கூட்ட வேண்டும் என்று தவறாக எண்ணிக்கொண்டு நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை, போட்டிப் போட்டு அச்சிடும் காலத்தில், நடிகைகள், நடிகர்கள் படம் இன்றி இலக்கியத்தரமான இதழை நடத்தி வரும் கொள்கையாளர். தரக்கொள்கையை என்றும் தளர்த்திக் கொள்ளாத உறுதி மிக்கவர். கவிதை, கதை, கட்டுரை, தலையங்கம் என பல்சுவை விருந்தாக வரும் தரமான இதழ்.

நூலாசிரியர் எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் அவர்கள் பிறந்த மண் பற்று மிக்கவர், பிறந்த ஊர் புதுகையை பெயரோடு சேர்த்துக் கொண்டவர். நடத்தும் இதழின் பெயரிலும் புதுமையைச் சேர்த்துக் கொண்டவர்.

ஜனவரி 2009 மாதம் தொடங்கி டிசம்பர் 2014 வரை 6 ஆண்டுகள் வெளிவந்த 72 தலையங்கங்களின் தொகுப்பு நூல் இது. இந்நூல் படித்தாலே புதுகைத் தென்றல் இதழின் தரத்தையும், நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும். சிலர் ‘பத்திரிகை தர்மம்’ என்பார்கள். ஆனால் அதனை கடைபிடிக்க மாட்டார்கள். ஒரு சில இதழ்களில் ஒரு சில காட்சிகளின் சார்பு நிலையை தலையங்கமே உணர்த்தி விடும். ஆனால் புதுகைத் தென்றல் ஆசிரியர் எழுத்தாளர் மு. தருமராசன் அவர்கள், எக்கட்சியையும் சாராமல் மனசாட்சி ஒன்றை மட்டுமே சார்ந்து தலையங்கம் எழுதி, ‘பத்திரிகை தர்மத்தை’ உண்மையிலேயே கடைபிடித்து வரும் மாமனிதர்.

தமிழ்ச் சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் எழுதிய தலையங்கங்கள் தொகுப்பு நூலிற்கு ‘விழிப்புணர்வு’ என்று தலைப்பிட்டது நல்ல பொருத்தம், பாராட்டுக்கள்.
‘தலையங்கம்’ என்ற பெயரில் ஆள்வோருக்கு ஜால்ரா போடுவதும், எதிர்க்கட்சிகளை சாடுவதும் சில ஆசிரியர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர் பிரதமரே ஆனாலும், குற்றம் என்றால் குற்றமே என்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று சொன்ன நக்கீரர் கதை வழியில் நடைபோடுகின்றார்.

முதல் தலையங்கத்தின் தலைப்பே முத்தாய்ப்பு. இளைஞர்கள் எழுக! இமயமாய் உயர்க! இந்த தலையங்கத்தில் சந்திரனுக்கு சந்திராயன்! அனுப்பிய சாதனையை எழுதி விட்டு “எல்லாத் துறைகளிலும் இவ்வாறு எல்லையில்லாச் சாதனைகள் படைத்திட இந்திய இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது அவசியம்”.

“வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் மூலதனம்”

என்ற வரிகளின் மூலம் தன்னம்பிக்கை விதை விதைத்த கவிஞாயிறு தாராபாரதி அவர்களின்,

“என் உயரம் இதுவென்று எழுந்து நில்!
விண்ணுயரம் கூட விலாவுக்குக் கீழே தான்!”

தலையங்கத்தில் சொல்ல வந்த தகவலுக்கு பொருத்தமான வரிகளை பொருத்தி எழுதி முடித்தது முத்தாய்ப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் ஒளிரட்டும் இந்தியா என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அற்புதமான தலையங்கம் ‘எப்போதும் தொடரும் ஏழை – நடுத்தர மக்களின் துயரம்’ தலையங்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள், கோடிகளில் கொழிப்பதற்கும், ஏழை-நடுத்தர மக்கள் கசக்கிப் பிழியப்படுவதுமான அவல நிலைக்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்துள்ளார்.

அரசியல், சமூகம், விஞ்ஞானம், தன்னம்பிக்கை, கல்வி, மங்கள்யான் என்று பல்வேறு நிலைகளில் யோசித்து கவியரசு கண்ணதாசன் மொழிக்கு ஏற்ப,

‘ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன் – எவர்
வரினும் நில்லேன் – அஞ்சேன்’

என்று மிகத்துணிவுடன் மாத இதழில் மிகச்செறிவாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும், சுவையாகவும் எழுதி வருகிறார்கள். தொய்வின்றி தலையங்கம் தொடர்வது போலவே தலையங்கங்களின் தொகுப்பு நூலும் தொடர்ந்து வர வேண்டும் என்று வாழ்த்தி விழிப்புணர்வு விதைத்து வருவதற்கு பாராட்டையும் முடிக்கிறேன்.

Please follow and like us:

You May Also Like

More From Author