வெளிச்ச விதைகள்.

Estimated read time 1 min read

Web team

IMG_20240410_093607.jpg

வெளிச்ச விதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
மதிப்புரை : முனைவர் ச. சந்திரா

வெளியீடு ;வானதி பதிப்பகம் !

190 பக்கம் . விலை ரூபாய் 120.
23. தினதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
பேச 044- 24342810 / 24310769
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com

நுழைவு வாயில்:

ஹைக்கூ திலகம் இரா. இரவியின் ‘வெளிச்ச விதைகள்’ – என்னும் நூல் அவரது வெளியீட்டு எண்ணிக்கையில் பதினாறு; பக்கங்களின் எண்ணிக்கையோ நூற்று எண்பத்தாறு; இடம் பெறும் கவிதைகளில் எண்ணிக்கையோ பன்னிரு ஆறு (12X6=72) ; நூலின் மொழிநடையோ தேனாறு; இடையிடையே பெண்ணாறு; மொத்தத்தில் வாசிப்போர் மனதோ பாலாறு.

‘ஹைக்கூ’ – என்னும் மூன்று சக்கர வாகனத்தில் ஏறி, கருங்கல் சாலை, செம்மண் சாலை என வேறுபாடு, பாகுபாடு பாராது கரடுமுரடானப் பாதைகளில் பயணித்து, முட்டுச் சந்து வந்தாலும், முட்டாமலேயே பக்குவமாக, இலாவகமாகத் திரும்பி சீராக ஓட்டும் அனுபவசாலியே இரா. இரவி. இது இப்படியிருக்க, எட்டுச்சக்கர கனரக வாகனத்தில் ஏறி தமிழியம், அகவாழ்வியல், இயற்கை, சமூகவியல் என்னும் நால்வழிச் சாலையில் பயணிக்கின்றார் கவிஞர்.

எது முதல் எது வரை?

உதிரிப் பூக்கள் முதல் உறவுகள் வரை. சேய்மை முதல் தாய்மை வரை, பாரி முதல் ஓரி வரை, காகிதக் கப்பல் முதல் கனல் கக்கும் அணுஉலை வரை, சிலப்பதிகாரம் முதல் சிம்பொனி வரை, சோளக்கதிர் முதல் சோம்பித் திரிவோர் உண்ணும் பீட்ஸா வரை, ஏணி முதல் தோணி வரை, எட்டுக்கு எட்டு வீடு முதல் எட்டடுக்கு மாளிகை வரை என ஆதி முதல் அந்தம் வரையான அனைத்தையும் கருவாகக் கொண்டு கவிதை பல புனைந்திருக்கிறார் கவிஞர் இரா. இரவி.

கவிஞர் கரங்களில்:

கொடியில் காய்க்கும் பூசணிக்காய் வாய் திறந்து பேச முனைகின்றது. நெல்லிலிருந்து சொல்லுக்குத் தாவுகின்றன எழுத்துக்கள். நிலவோ விளம்பரத் தூதுவராய் உருமாறி மார்க்கெட்டிங் பண்ண கிளம்புகிறது. விளையாட்டு பொம்மைகள், கூட உயிர்பெற்று சமரசம் பண்ணத் துடிக்கின்றன. ஆதிரை கரங்களில் இருந்து அட்சயப் பாத்திரம் மீனவர் கரங்களுக்கு இடம் பெயர்கின்றது. பதக்கங்களோ இதழ் திறந்து பெண்ணியம் பற்றி விவாதம் செய்கின்றன. இப்படி இன்னும் பல பல…

அஃறிணை உயிர்களெல்லாம் உயர்திணை உயிர்களைத் திருத்தும் பொருட்டு தங்கள் பணியினைச் செவ்வனேச் செய்கின்றன கவிஞர் இரா. இரவி கவிதைகளில் எனலாம்.

அட்டைப்பட விளக்கம்:

குவிந்து கிடக்கும் புத்தகங்களைப் புனிதமாக எண்ணி, உனக்கான எதிர்காலம் எப்பக்கத்தில் உள்ளது என்பதனைக் கண்டறிந்து நடந்தாயானால், உன் வாழ்வு சோலைவனம். இல்லையேல் உன் வாழ்வு பாலைவனம் என்பதனையே ‘வெளிச்ச விதைகள்’ – என்னும் நூலின் முன் அட்டைப்படம் வாசகர்க்குச் சொல்ல வருகின்றது.

இலக்கிய உலகில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் இருபெரும் எழுத்து மேதைகளது (டாக்டர். வெ. இறையன்பு, முனைவர் இரா. மோகன்) நெஞ்சத்திலும் நீங்காது இடம் பெறுபவரே கவிஞர் இரா. இரவி என்பதனையே பின் அட்டைப்படம் பறைசாற்றுகின்றது.

காலத்தோடு கைகோர்ப்பு:

கையேந்தி பவனில் அப்பொழுதே செய்து அப்பொழுதிலேயே வழங்கப்படும் துரித உணவைப் போல (Fast Food) நேற்றைய சாதனை இன்றைய கவிதையாய் கவிஞர் கரங்களில் உருமாறி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு…..

“ஒற்றைப் பெண்ணாய் ஒலிம்பிக்கில் சாதித்தவர்
ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றவர்”. (ப. 110)

என சாக்சி மாலிக்கின் சாதனையை உடனுக்குடன் கவிதையாய் படிக்கிறார். இரா. இரவி.

“ஓடிவந்து நீ உயரம் சென்ற போது
உயரம் சென்றது நீ மட்டுமல்ல! இந்தியாவும் தான் (ப. 107)

என்ற கவிதையை ‘தங்கக் கவிதை’ – என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது?

ஆச்சர்யக் குறியா? கேள்விக் குறியா?:

கவிஞர் தன் மொழிநடைத் திறனில், கவிதையின் நடை ஓட்டத்தில் ஆச்சர்யத்தை வெளிப்படுத்துவதோடு, கேள்விகள் பலவும் எழுப்புகின்றனர்.

எடுத்துக்காட்டிற்கு இதோ!

“விபத்தின் போது ஏற்றப்பட்ட இரத்தம்
என்னச் சாதிக்காரனது எனத் தெரியுமா?” (ப.156).

“யாரும் ஊரே யாவரும் கேளீர் – என்று
யாவருக்கும் சொன்னவனுக்கா எல்லைக்கோடு?” (ப.169).

அம்மையப்பரா? அழகப்பரா?

“கெட்டவன் ஆனாலும் விட்டுத்தர மாட்டான்,
நல்லவன் என்றே மற்றவரிடம் வாதாடுவாள்” (ப. 22).

எனத் தாய்மையின் நிதர்சனத்தைப் பாராட்டுவதோடு நிற்காமல், பிற கவிஞர்களிடமிருந்து வேறுபட்ட, மாறுபட்டு தந்தையின் பண்புநலனை அழகாகப் பட்டியலிடுகிறார் கவிஞர் இரா. இரவி உதாரணத்திற்கு ஓரிரு வரிகள்!.

“சோதனை பல வந்தபோதும் சோர்ந்திடாமல்
சொக்கத் தங்கமாக வாழும் நல்லவர்” (ப. 25)

கண்ணீர்க் கவிதை:

மறைந்தும் மனதை விட்டு அகலாத கவிஞர் நா. முத்துக்குமார் பற்றிய கவிதை, வாசிப்போர் விழிகளிலிருந்து இரு சொட்டு கண்ணீர் வரவழைக்கும் இணையற்ற கவிதை.

“கொடிய தீயினுக்கும் உன்பாடல் கேட்க ஆசைவந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம்? (ப. 152).

படிம உத்திக்குச் சான்று:

“பசியோடு பார்ப்பவனுக்கு தோசை நீ
பரவசத்தோடு பார்ப்பவனுக்கு பால்நிலா நீ”

என்பதில் கண்முன் காட்சியாய் படிம உத்தியும், பாவேந்தர் பாரதிதாசனின் சாயலில் சமூக அவலமும் கவிஞர் இரா. இரவியால் ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

முரண் நயம்:

“கரி காசாகுது நெய்வேலியில்
காசு கரியாகுது தீபாவளியில்”

போகிற போக்கில்….

கவிதை நதியோட்டத்தின் நெளிவு. கழிவோடு, போகிற போக்கில் தனது அனுபவத்தையும் தேனாய்க் குழைத்துக் கொடுப்பதில் கவிஞர் இரா. இரவிக்கு நிகர் அவர் மட்டுமே! சாட்சிக்கு ஓரிரு வரிகள்….

“முக்கியமான காகிதத்தில் செய்து
அடி வாங்கிய அனுபவ முண்டு!
காகிதக் கப்பல்!” (ப. 173).

இயைபுக் கவிதை:

“விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாமம்
விலங்காக மனிதன் மாறிச் செல்வது அவமானம்” (ப. 135).

மனமார…

விதைகள் விருட்சமாக உருமாறுவது வெளிச்சத்தினால் மட்டுமே! நம் எண்ணங்கள் செயல்பாடாக மாறுவது பகுத்தறிவு ஒளியால் மட்டுமே! இதுவரை எப்படி இருப்பினும், அறியாமை என்னும் இருட்டுக்குள் ஒளிந்து கிடக்கும் எண்ணங்களை ஆறாம் அறிவு கொண்டு செதுக்கி வண்ணங்களாக ஒளியேற்ற முயல்வோமாக! என்பதனையே கவிதைகள் வழி கல்வெட்டாகப் பதிக்கின்றார் கவிஞர் இரா. இரவி.

‘காதல்’ – என்னும் ஒரு வழிப்பாதையில் கவிதைப் பயணம் செய்வதை விட்டுவிட்டு, அறிவியல், அரசியல் என்னும் சுற்று வழிப்பாதை மறுத்து, சமூக அவலம் நீக்கும் வண்ணமாக தேசிய நெடுஞ்சாலையில் சீராகப் பயணித்தால் இலக்கிய உலகில் இரா. இரவி எட்டத் துடிக்கும் எல்லையைத் தொடலாம் என்பது என் போன்ற இணையதள வாசகியரின் தாழ்மையான கருத்து. கவிஞரின் பேரும் புகழும் அலைகடல் தாண்டி ஒலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!.

Please follow and like us:

You May Also Like

More From Author