கலைஞர்

Estimated read time 1 min read

Web team

karunanithi_1.jpg

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

ஒற்றைச் சொல்லில்
உலகம் அறிந்தது
கலைஞர் !

பெரியாரின் கனவுகளை
நனவாக்கிய
போராளி !

அண்ணாவின்
அடிச்சுவட்டில்
அடி எடுத்து வைத்தவர் !

முதல்மொழி தமிழுக்கு
முதலிடம்
முன்மொழிந்தவர் !

மனிதனை மனிதன் இழுத்த
கைவண்டிக்கு
முடிவு கட்டியவர் !

சமூகநீதியைக் காத்தவர்
சமூகம் பாராட்டியவர்
காலத்தில் நின்றவர் !

அணைகள் பல கட்டியவர்
பாலங்கள் பல போட்டவர்
தமிழகத்தை உயர்த்தியவர் !

கேள்வியும் நானே
பதிலும் நானே
என சிந்திக்க வைத்தவர் !

தமிழின் பெருமையை
தரணிக்கு
உணர்த்தியவர் !

மாற்றுக்கட்சியினரும்
மதித்திடும்
மாண்பாளர் !

தேனீயென சுற்றியவர்
தோணியென உழைத்தவர்
ஏணியென நின்றவர் !

சுறுசுறுப்பின் இலக்கணம்
சோர்வே அறியாதவர்
சுடரென ஒளிர்ந்தவர் !

வள்ளுவர் கோட்டத்தை
வனப்பாக
வடிவமைத்தவர் !

வான் முட்டும் சிலையை
வள்ளுவருக்கு
வைத்தவர் !

குறளோவியம்
தீட்டிய
இலக்கிய ஓவியர் !

கருப்பு கண்ணாடியையும்
மஞ்சள் துண்டையும்
அடையாளமாக்கியவர் !

திரைப்பட வசனத்தில்
தனி முத்திரைகள்
பதித்தவர் !

கவியரங்குகளில்
கர்ஜனை செய்திட்ட
கவிச்சிங்கம் !

செம்மொழிப்பாடலை
சிறப்பாக
செதுக்கியவர் !

மந்தி மொழியான
இந்தி மொழியை
என்றும் எதிர்த்தவர் !

காலத்தால் அழியாத
கற்கண்டுக் கவிதைகள்
யாத்தவர் !

கோடான கோடி
இதயங்களை
கொள்ளை அடித்தவர் !

சட்டமன்ற உரையில்
சரித்திரம்
படைத்தவர் !

தமிழகம் மட்டுமல்ல
இந்திய அரசியலிலும்
தடம் பதித்தவர் !

நிரந்தர
சட்டமன்ற உறுப்பினராக
நிலைத்து நின்றவர் !

ஆதிக்கம்
எங்கிருந்தாலும்
எதிர்த்தவர் !

என்றுமே
தேர்தலில் தோற்காத
வெற்றி வீரர் !

படிக்காத மேதை
பகுத்தறிவுப் பாதை
பிடிக்காது கீதை !

நிறுத்தியது
சுவாசம்
சூரியன் !

முத்தமிழ் அறிஞர்
மூத்த அரசியல் தலைவர்
நிறுத்தினார் மூச்சை !

எடுத்தது
நிரந்தர ஒய்வு
ஒய்வறியாச் சூரியன் !

நிரந்தரமானது
தூக்கம்
ஆதவன் !

இமயம் சரிந்தது
மிகையன்று
உண்மை !

ஓய்ந்தது
பின்தூங்கி முன்எழும்
சுறுசுறுப்பு !

சரித்திரம் படைத்தவர்
சகலகலா வல்லவர்
சாய்ந்து விட்டார் !

பராசக்தி படத்தில்
பகுத்தறிவை
விதைத்தவர் !

கழகத்தவரை
கரகர காந்தக்குரலால்
கட்டிப்போட்டவர் !

உடன்பிறப்புக்கு
மடல் வரைந்து
மகிழ்ச்சி தந்தவர் !

கணக்கில் அடங்காது
சொல்லி முடியாது
உன் சாதனைப்பட்டியல் !

உன் உடலுக்குத்தான் மறைவு
உன் உணர்வுக்கு
என்றுமில்லை மறைவு !

.

Please follow and like us:

You May Also Like

More From Author