டெல்லியில் பழங்குடியினர் திருவிழாவை தொடங்கி வைத்தார் குடியரசுத்தலைவர்!

Estimated read time 1 min read

டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஆதி மஹோத்சவ் 2024 எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது நாடு பன்முகத்தன்மை நிறைந்தது  என்று கூறினார். ஆனால் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உணர்வு எப்போதும் இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரின் பாரம்பரியம், உணவு, மொழி ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், பின்பற்றவும் உள்ள ஆர்வமே இந்த உணர்வுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் உணர்வுதான் நமது ஒற்றுமையின் மையமாக உள்ளது என்று அவர் கூறினார். ஆதி மகோத்சவத்தில் பல்வேறு மாநிலங்களின்  பழங்குடியினக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தனித்துவமான சங்கமத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பழங்குடியின சகோதர சகோதரிகளின்  வாழ்க்கை முறை, இசை, கலை மற்றும் உணவு வகைகளை அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் கூறினார். இந்த விழாவின்போது பழங்குடியின சமூகத்தின் வாழ்க்கையின் பல அம்சங்களை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நவீனத்துவம் முன்னேறி வரும் நிலையில், அது அன்னை பூமிக்கும், இயற்கைக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இயற்கையை பாதிக்காத வளர்ச்சி சாத்தியமானது என்று அவர் தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள பழங்குடி சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக இயற்கையுடன்  இணக்கமாக வாழ்ந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். நமது பழங்குடியின  சகோதர சகோதரிகள் சுற்றுச்சூழல், மரங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கவனித்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் உத்வேகம் பெறலாம் என்றும் அவர்  கூறினார். இன்று, உலகம் முழுவதும் புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும் போது, பழங்குடி சமூகத்தின் வாழ்க்கை முறை இதில் முன்மாதிரியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நவீன யுகத்தின் முக்கிய பங்களிப்பான தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை  எளிதாக்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நவீன வளர்ச்சியின் பலன்களை பழங்குடியினரும் ஏற்று முன்னேற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பழங்குடியினரின் பங்களிப்பு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கிய  பங்காற்றுவதுடன், எதிர்காலத்திலும் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார். சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே நம் அனைவரின் முயற்சியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பாரம்பரிய அறிவுக் களஞ்சியத்தை இந்தியா கொண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த அறிவு பல ஆண்டுகளாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது பல பாரம்பரிய திறன்கள் அழிந்து வருகின்றன என்று அவர் கூறினார். பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிந்து வருவதைப் போலவே, பாரம்பரிய அறிவும் நமது கூட்டு நினைவிலிருந்து மறைந்து வருகிறது என்று அவர் கவலை தெரிவித்தார்.

இந்த விலைமதிப்பற்ற அறிவைச் சேர்த்து வைத்து, இன்றைய தேவைக்கேற்ப அதை சரியாகப் பயன்படுத்துவது நமது முயற்சியாக இருக்க வேண்டும் என்றும் இந்த முயற்சியிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

பழங்குடியினருக்கான துணிகர மூலதன நிதியை (VCF-ST) தொடங்கியதற்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். இது பழங்குடியின சமூகத்தினரிடையே  தொழில்முனைவு மற்றும் புத்தொழில்க் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, புதிய தொழில்களை நிறுவி, தற்சார்பு இந்தியாவை உருவாக்க பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் பழங்குடி பாரம்பரியத்தின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பழங்குடியினர் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைஃபெட் (TRIFED) ஆதி மஹோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு இந்த விழா பிப்ரவரி 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author