அங்கித் திவாரி வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தடை விதிக்க முடியாது’ மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

Estimated read time 1 min read

அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்யவும் அலுவலகத்தில் சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. அங்கித் திவாரி வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தடை விதிக்க முடியாது’ என சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டம், நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவேக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் நிதி சார்ந்த குற்றங்களில் தொடர்புடைய இடங்களில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பழிவாங்கும் வகையில், அமலாக்கத்துறையினர் மீது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமலாக்கத் துறை தரப்பில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கியதாகக் கூறி அமலாக்கத் துறையின் மதுரை மண்டல துணை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

                                  மதுரை கிளை உயர்நீதிமன்ற (MADURAI HIGH COURT BENCH)

மதுரை மண்டல அலுவலகத்தில் இருந்த அலுவலர்களை அடையாளம் தெரியாத 35 பேர் தடுத்து வைத்துள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் திவாரி வீட்டில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அங்கிருந்த ரகசிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் உடனடியாக தமிழ்நாடு டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு அமலாக்கத் துறை உதவி இயக்குநர் தரப்பில் கடிதம் எழுதப்பட்டது.

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி

மாநில அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறையால், ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இது அரசின் செயல்பாட்டை பாதிக்கும். எனவே, அங்கித் திவாரி மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும். இந்த விசாரணையை மாநில அரசு மேற்கொண்டால் நியாயமான விசாரணை நடைபெறாது. எனவே அமலாக்கத்துறை அதிகாரி கைது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி செயல்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

     அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் 

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘இன்ஸ்பெக்டர் தகுதிக்கு மேல் உள்ள அதிகாரிகளைக் கொண்ட ஒவ்வொரு லஞ்ச ஒழிப்பு அலுவலகமும் காவல் நிலையம் தான். மாநில அரசின் பகுதிக்குள் லஞ்சம் வாங்கி பிடிபட்ட வழக்கை நடத்தும் அதிகாரம் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு உள்ளது.

 

அமலாக்கத்துறை அதிகாரியும் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய போது தான் பிடிபட்டுள்ளார். இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அமலாக்கத்துறை அதிகாரியின் கைது சட்ட நடை முறைபடி தான் நடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு வழக்கிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் மாநில அரசின் கீழுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையால் ஒன்றிய அரசின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் உள்ளது என ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில், தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறை அதிகாரி அலுவலகம் மற்றும் வீடுகளில் நடந்த சோதனை உள்ளிட்ட அனைத்தும் விதிப்படியே நடந்துள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. இந்த மனுவை ஏற்கக் கூடாது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படியானதே’’ என வாதிட்டனர்.

தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா
இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஒன்றிய அரசின் கீழுள்ள அலுவலர், அதிகாரிகளை லஞ்ச வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்ய முடியாது என்பது ஏற்புடையதல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையினரும் காவல்துறை தான் என்பது ஏற்கனவே பல வழக்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கியபோது தான் பிடிபட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை. அமலாக்கத்துறையினரை கைது செய்யவும், விசாரணை நடத்தவும் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது. சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பது தேவையற்றது. லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டியதில்லை. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author