இரண்டாவது நாளாக சென்னை உட்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை!

Estimated read time 0 min read

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் இரண்டாவது நாளாக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்தவகையில், நேற்று தமிழத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ரத்னா நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேலு. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும், இவர் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் நேற்று காலை தங்கவேலு வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இதேபோல், பாளையங் கோட்டை மகாராஜநகரில் உள்ள திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர்கல்லூரி அருகேயுள்ள நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்தில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 12 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், நாங்குநேரி அருகே விஜயநாராயணத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. முக்கிய அரசியல் கட்சிகளுக்குஒப்பந்ததாரர்கள் பெருந் தொகையை நன்கொடையாக வழங்குவதாக வந்த தகவலின்பேரில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், கோவை, அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ்பகுதி அருகே உள்ள அமைச்சர்கே.என்.நேருவுக்கு நெருக்கமானவரான அவிநாசி ரவி என்பவரது அலுவலக கட்டிடத்தில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.‌

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரம் செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் என்பவரின் நகைக்கடை, மற்றும் வந்தவாசி சாலையில் பிரபல நகைக்கடை ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் இரவு 9 மணிக்கு பிறகும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தற்போது இரண்டாவது நாளாக பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழகத்தில் திருப்பூர், திருச்சி, நெல்லை, சென்னை உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author