காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : மக்கள் நம்ப மாட்டார்கள் – வானதி சீனிவாசன்! 

Estimated read time 1 min read

இனம், மொழி. ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தும் குடும்ப கட்சிகளின் தேர்தல் அறிக்கை போல காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  வானதி சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மருத்துவக் கல்வி, இட ஒதுக்கீடு முறையை சீர்குலைக்க முயற்சிக்கிறது காங்கிரஸ்
ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியாவும் ராகுலும் வெளியிட்டுள்ளனர்.

2014 – 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத அளவுக்கு, காங்கிரஸ் கட்சியை இந்திய மக்கள் படுதோல்வி அடையச் செய்தார்கள்.
சுதந்திர இந்தியாவில் 55 ஆண்டு காலம் ஊழல், குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியால்,  கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரம் இல்லாமல் இருக்க முடியவில்லை.

அதனால், தங்களைப் போல ஊழல், குடும்ப ஆட்சி நடத்தி வரும் மாநில கட்சிகள் ஆதரவுடன் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டு வருகிறார்கள். அதற்காக மக்களை ஏமாற்ற, தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 6.000 ரூபாய் தருவோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின.

இந்த முறை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஏமாற்று வேலைகளை பார்த்து வரும் இந்திய மக்கள், இந்த பொய் புரட்டுகளை எல்லாம் நம்ப மாட்டார்கள். பாஜக ஆதரவுடன் இருந்த மத்திய அரசு தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. அதை நடைமுறைக்கு கொண்டு வராமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தியது காங்கிரஸ்.

இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி இன்று பிற்படுத்தப்பட்டோர் காவலனாக புதிய வேடமிட்டு வருவதைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்காகவே 10 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்தது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிச்சயம் கண்டிப்பார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை படிக்கும்போது. ஜாதி, இனம், மொழி வெறியை தூண்டி அரசியல் நடத்தி வரும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள குடும்ப அரசியல் நடத்தும் மாநிலக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் தொகுப்பு போல உள்ளது.

தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் இன்று மாநிலக் கட்சியாக சுருங்கிவிட்டது. அதனால்தான் மாநில கட்சிகள் போல பிரிவினையை தூண்டும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளது. இதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் படுதோல்வி அடையச் செய்வார்கள்.

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தான் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை, சமையல் எரிவாயு இணைப்பு மின் இணைப்பு ரேஷனில் உணவு தானியங்கள் என்று அடிப்படை வசதிகள் சாத்தியமாகியிருக்கிறது.

நெடுஞ்சாலைகள், அதிவிரைவுச் சாலைகள், மேம்பாலங்கள, புதிய ரயில் பாதைகள், புதிய ரயில்கள், துறைமுக மேம்பாடு, புதிய விமான நிலையங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், புதிய உயர்கல்வி நிறுவனங்கள் என்று அடிப்படை கட்டமைப்பில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சியை உலகமே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் பலன்களை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைவது உறுதி எனெத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author