தமிழகம் திமுக ஆட்சியில் பின் தங்கியுள்ளது: அண்ணாமலை

Estimated read time 1 min read

 தமிழகத்தில் குடும்ப ஆட்சியும் ஊழலும் மட்டும்தான் நடைபெறுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருப்பத்தூரில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

சந்தன மாநகர் என அழைக்கப்படும் வாசமிகு நகரம். திருப்பத்தூர் மாவட்டம், சோழனூர் அருகே கல்யாண முருகன் கோயில் அருகே கற்கால மக்கள் தீட்டிய 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய வெண்மை நிதிப்பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொகுதிகளில் ஒன்று இந்த திருப்பத்தூர். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதீஸ்வரர் குடி கொண்டிருக்கும் பகுதி இந்த திருப்பத்தூர் தொகுதி.

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலத்தில் உள்ள, பழங்குடியின மாணவர்களுக்கான, ஏகலைவா மாதிரி பள்ளிகள் திட்டம் 2016ஆம் ஆண்டு நமது ஆட்சியில் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 694 பள்ளிகள் உள்ளன.

அவற்றில் 1,15,169 பழங்குடியினர் சமுதாய மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்தில் 8 பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு 8.67 கோடி ரூபாய் நமது மத்திய அரசு இந்தப் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. தமிழகத்தில் 2,488 பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர். கடினமான நுழைவு தேர்வுகளில் ஒன்றான IIT – JEE நுழைவு தேர்வில், தமிழகத்தில் உள்ள ஏகலைவா பள்ளி மாணவர்கள் 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது, இப்பள்ளிகளின் கல்வித்தரத்துக்கு எடுத்துக்காட்டு. ஆனால், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்காக, மத்திய அரசுப் பள்ளிகள் தமிழகம் வருவதைத் தடுக்கின்றனர்.

இன்றைய தினம், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நமது குடியரசுத் தலைவருக்கு, பாராளுமன்றத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது. சோழர்களின் பெருமையான செங்கோல் தலைமை தாங்க, அனைவரும் அதை பின்தொடர்ந்து வந்தது தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும். ஒரு பழங்குடியினப் பெண், இன்று நமது நாட்டின் ஜனாதிபதி என்பது, நம் அனைவருக்கும் பெருமை தருவதாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பேற்றபோது, அதற்கு முன்பாக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழலால், இந்தியா ஊழல் நாடு என்ற பெயர் பெற்றிருந்தது. திமுக உள்ளிட்ட ஒவ்வொரு ஊழல் கட்சிகளும், நாட்டைக் கூறு போட்டு, ஊழல் செய்து கொண்டிருந்தனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக, நமது பிரதமர் மோடி தலைமையில் நேர்மையான, ஊழலற்ற, ஏழை மக்கள் நலனை மையமாகக் கொண்ட, வளர்ச்சிப் பாதையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளில், வேகமாக வளரும் நாடாக, தொடர்ந்து 7% வளர்ச்சி அடையும் நாடாக நமது நாடு முன்னேறி வருகிறது.

உலகப் பொருளாதாரத்தில், 11 ஆவது இடத்தில் இருந்து, 5 ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். 2028 ஆம் ஆண்டில், மூன்றாவது பெரிய நாடாக உயர்வோம் என்பது உறுதி. அடுத்த 25 ஆண்டுகளில், உலகின் முதல் பொருளாதார நாடாக உயர வேண்டும் என்ற குறிக்கோளுடன் நமது பிரதமர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஒவ்வொரு மாநில மக்களும், பாஜகவின் நேர்மையான அரசியல் மீது நம்பிக்கை கொண்டு, மீண்டும் மீண்டும் பாஜகவையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்திய மக்கள், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அரசுக்கு இரண்டு முறை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொடுத்தார்கள். காங்கிரஸால் உருவாக்கப்பட்டு, கடந்த 70 ஆண்டு காலமாக, நமது நாட்டின் வளர்ச்சியைத் தடுத்த பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும், கடந்த பத்து ஆண்டுகளில் நமது பிரதமர் அவர்கள் தீர்வு கண்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து என காங்கிரஸ் செய்த தவறால், 70 ஆண்டு காலமாக, காஷ்மீர் மக்களுக்கே முழு உரிமைகள் கிடைக்காமல் இருந்தது. இட ஒதுக்கீடு கிடைக்காமல், பெண்களுக்கான சொத்துரிமை இல்லாமல் காஷ்மீர் மக்களே அவதிப்பட்டு வந்தார்கள்.

370 சட்டத் திருத்தத்தை நீக்கி, காஷ்மீரில் ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை இருப்பதை உறுதி செய்துள்ளார் நமது பிரதமர். கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும், ஒரு கோடியே எண்பத்தெட்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குச் சென்றிருக்கிறார்கள். இதன் மூலம், காஷ்மீர் மக்களுக்கான வாழ்வாதாரம் பெருகியிருக்கிறது. காஷ்மீர் அமைதியான மாநிலமாக மாறியிருக்கிறது.

சுமார் 500 ஆண்டுகளாக, கோவில் இல்லாமல் மரத்தடியில் வைத்து வழிபட்டு வந்த குழந்தை ராமருக்கு, யாருடைய மனதையும் புண்படுத்தாமல், சட்டத்தின் மூலமாகவே தீர்வு கண்டு, கோவிலும் கட்டி முடித்திருக்கிறார் நமது பிரதமர்.

அடுத்த ஆண்டு மட்டும், சுமார் 25,000 கோடி வருமானம், உத்திரப் பிரதேச மாநிலத்துக்கு ராமர் கோவில் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத வேறுபாடின்றி, அங்குள்ள அனைத்து மக்களும் இதனால் பலனடைவார்கள்.

நமது வெளியுறவுத் துறை, இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து இருக்கிறது. உலகின் அத்தனை நாடுகளும், இந்தியாவின் கருத்தைக் கேட்காமல் எந்த சர்வதேச முடிவுகளையும் எடுப்பதில்லை. உலகின் அத்தனை நாடுகளின் தலைவர்களும், நமது பிரதமர் மீது மிகப் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்கள்.

அதுபோல, கடந்த 2004 – 2014 காங்கிரஸ் ஆட்சியில், தினம் தினம் குண்டு வெடிப்புகளும், தீவிரவாதத் தாக்குதல்களுமாக, நாடே பாதுகாப்பின்றி இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, உள் நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, நாட்டிற்கு எதிராக, மக்களுக்கு ஆபத்தான ஒவ்வொரு இயக்கங்களையும் களையெடுத்திருக்கிறோம்.

தீவிரவாதிகளை ஒடுக்கியிருக்கிறோம். இன்று இந்தியா அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. நமது நாடு முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும் என்றால், குடும்ப ஆட்சி, ஊழல் அறவே இருக்கக் கூடாது என்பதில் நமது பிரதமர் அவர்கள் உறுதியுடன் இருக்கிறார். பத்து ஆண்டுகளில், ஊழலற்ற ஆட்சி வழங்க முடியும் என்பதை நமது பிரதமர் அவர்கள் நிரூபித்திருக்கிறார்.

ஆனால் தமிழகத்தில், குடும்ப ஆட்சியும் ஊழலும் மட்டும்தான் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுக குடும்ப ஆட்சியையே நடத்துகிறது. இளைஞர்களுக்கோ, தொண்டர்களுக்கோ எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை.

அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் சிறையில் இருந்தால், அவர்கள் பணியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், 8 மாதங்களாக, 230 நாட்களாகச் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். அமைச்சர் பொன்முடியும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவி இழந்திருக்கிறார்.

இன்னும் பத்து திமுக அமைச்சர்கள் பல்வேறு வழக்குகளுடன் இருக்கிறார்கள். விரைவில் திமுக அமைச்சரவையில், இலாகா இல்லாத அமைச்சர்கள்தான் அதிகம் இருப்பார்கள். வட மாநில மக்களை திமுக தலைவர்கள் தரக்குறைவாக விமர்சித்தார்கள்.

இன்று, உத்திரப் பிரதேச மாநிலம் பொருளாதாரத்தில் தமிழகத்தைப் பின்தள்ளி, இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகம் திமுக ஆட்சியில் பின் தங்கிச் சென்றிருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தல், ஏழை எளிய மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நமது பிரதமர் மோடி அவர்களுக்கும், ஊழல் கட்சிகளுக்கும் இடையேயான தேர்தல். நமது பிரதமர் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author