திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது! – ஜே.பி . நட்டா குற்றச்சாட்டு

Estimated read time 0 min read

தான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன என்றும், எமர்ஜென்சி காலம் போல காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சவுகார்பேட்டையில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், மிண்ட் பகுதியில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையில் பங்கேற்றார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, வள்ளலார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா,

“தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மிக மோசமானது. ஆளும் திமுக அரசுக்கு அறிவும் இல்லை. திமுக அரசுக்கு மனசாட்சி இல்லை, ஜனநாயகம் இல்லை. நான் வரும் வழியில் எல்லாம் கடைகள் மூடப்பட்டிருந்தன. திமுகவினர் மிரட்டி கடைகளை மூட வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு மோசமான தலைவரால் சீரழிகிறது.

நான் இங்கு வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. சென்னையில் இன்றைய தினம் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பது எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால், இது நீண்ட காலம் இருக்கப்போவது இல்லை. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும். ஊழலற்ற அரசை நாங்கள் நடத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டை திசை திருப்பும் திமுகவின் தலைமையில் இந்த மாநிலம் இருந்து வருகிறது. ஊழல் அரசை அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள். இந்த மண்ணில் யாரெல்லாம் ஊழல் ஆட்சி செய்து வருகிறார்களோ, அவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்துகொண்டு இருக்கிறது. பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருந்து வருகிறது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author