வெற்றுப் பேச்சை விடுத்து வெள்ளையறிக்கை தர வேண்டும்

Estimated read time 1 min read

இந்தியாவில் அதிக முதலீடுகள் குவியும் மாநிலத்தில் ஒன்றாக தமிழ்நாடும் உருவெடுத்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் பெருமிதம் பொங்க கூறி வருகின்றனர். இதற்காக அவ்வப்போது இவர்கள் அடுக்கி வரும் புள்ளி விவரங்களை தமிழக மக்களை மலைக்க வைக்கிறது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? வாயில் வடை சுடுவது என்று சொல்வார்கள். அதில் வித்தகர்களான திமுகவினர் ஆட்சியமைத்த இரண்டரை ஆண்டுகளில் அடுத்தடுத்து அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகள் ஏராளம். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட சில புள்ளி விவரங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழகத்தில் தங்கள் ஆட்சியமைந்த 14 மாதங்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் கூறினார்.

திமுக ஆட்சியமைந்த பிறகு நடந்த முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.1,25,244 கோடி மதிப்பிலான 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாகவும். பின்னர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் அதன் எண்ணிக்கை 192 என்ற அளவில் உயர்ந்துள்ளதாகவும் புள்ளி விவரங்களை அடுக்கினார். இதன்மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் உறுதிபட தெரிவித்தார். பின்னர் கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். 9 நாட்கள் சிங்கப்பூர் – ஜப்பான் பயணத்தில், முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் ரூ.3,233 கோடி என்று அதிகரித்து புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. மிட்சுபிஷி நிறுவனத்துடன் 1,891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் செய்யப்படும் ஒப்பந்தத்துக்கு சிங்கப்பூர், ஜப்பான் பயணமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டிய முதலீடு எவ்வளவு என்ற விவரத்தை கடைசி வரையில் தமிழக மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்கவில்லை. ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் கொமாட்சு, ஓம்ரான் நிறுவனம் போன்றவை ஏற்கெனவே இந்தியாவில் தொழில் செய்வதாக தெரிகிறது. அப்படிபட்ட நிறுவனங்களின் தலைமையை சந்திக்க முதல்வர் சிங்கப்பூர், ஜப்பான் சென்றாரா? என்ற கேள்வி எழுகிறது. அதன் பிறகு இந்த ஆண்டு சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மகிழ்ச்சி பொங்க அறிவித்தார்.

இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் நிலை என்ன? எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற விவரமும் இதுவரை சொல்லப்படவில்லை.இந்த அறிவிப்புகள் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்திப்பதோடு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெற்று அறிவிப்புகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும் நடந்து கொண்டிருந்து இந்த அவல ஆட்சியில் சாதனைளை எப்படி மக்கள் எதிர்பார்க்க முடியும். அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் இந்த போலி திராவிட மாடல் அரசு உண்மையிலேயே தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கப்போவது எப்போது? தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது எப்போது? என்பது தான் இன்று தமிழக மக்கள் முன் வைக்கும் கேள்வி.

பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக திமுகவினர் மார் தட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் முதலீடுகள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. புதிய நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் தொழில் செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் கூட வேறு மாநிலங்களுக்கு செல்வது குறித்து யோசித்து வருகின்றன. வெறும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் போலி திராவிட மாடல் அரசு தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் தொடர்பாக விரிவான வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு? செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் என்னென்ன? இரண்டரை ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்தவை எத்தனை? இந்த புதிய முதலீடுகளால் எத்தனை ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்? என்ற விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

அதுபோலவே அரசு செலவில் இதுவரை சென்று வந்த வெளிநாட்டு பயணங்களில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் விவரங்களையும் வெளியிட வேண்டும். ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் தற்போது எந்த அளவில் உள்ளது என்ற விவரத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அரசு செலவில் பயணம் செய்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் தமிழக அமைச்சர்களும் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். வெற்றுப் பேச்சை விடுத்து செயலளவில் செய்தது என்ன? என்பதை மக்களுக்கு தெரிவக்க வேண்டும்.

2ஆயிரம் கோடி, லட்சம் கோடி என வாய்க்கு வந்த சொல்லிக் கொண்டே இருந்தால் மக்கள் நம்பி விடுவார்கள் என திமுக அரசு பகல் கனவு காண்கிறது. ஆனால் இந்த வாய் சொல் வீரர்களை மக்கள் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author