முன்னாள் பிரதமர் தேவகௌடாவைச் சந்தித்த பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஹெச்.டி.தேவகௌடாவை, டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.

கர்நாடக மாநிலத்தை தலைமையாகக் கொண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் தலைவராக இருந்த ஹெச்.டி.தேவகௌடா, கடந்த 1994 முதல் 1996 வரை கர்நாடக முதல்வராக இருந்தார். பின்னர், ஐக்கிய முன்னணி அரசில் 1996 முதல் 1997 வரை பிரதமராக இருந்தார்.

தேவகௌடாவுக்கு வயதாகி விட்டதால், அவரது மகன் குமாரசாமிதான் தற்போது மதச்சார்பற்றி ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். மேலும், 2006 முதல் 2007 வரை அம்மாநில முதல்வராகவும் இருந்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.

2018 சட்டமன்றத் தேர்தலில் 37 இடங்களைப் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதன் பிறகு, 2023 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியைச் சந்தித்தது.

இதையடுத்து, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதாக கடந்த செப்டம்பர் மாதம் குமாரசாமி பகிரங்கமாக அறிவித்தார். எனினும், கடந்த 15-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேவகௌடாவை சந்தித்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் தேவகௌடாவை சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பின்போது, குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா, முன்னாள் எம்.பி. குபேந்திர ரெட்டி, எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, எம்.எல்.ஏ. சி.என்.பாலகிருஷ்ணா ஆகியோரும் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “இருவருக்குமிடையேயான பந்தம் மற்றும் இருவரும் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையால் நான் வியப்படைந்தேன். நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பு மிகவும் மறக்க முடியாதது. பிரதமர் எங்கள் மீது காட்டிய அன்பு, நம்பிக்கை மற்றும் பாசத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், “முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகௌடா, ஹெச்.டி.குமாரசாமி மற்றும் ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோரை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். தேசத்தின் முன்னேற்றத்திற்கு தேவகௌடாவின் முன்மாதிரியான பங்களிப்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது. பல்வேறு கொள்கை விஷயங்களில் அவரது எண்ணங்கள் நுண்ணறிவு மற்றும் எதிர்காலம் சார்ந்தவையாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author