பிள்ளை வரம் தரும் கருவளர்சேரி!

Estimated read time 0 min read

ஒருவருக்கு எவ்வளவுதான் செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு என இருந்தாலும், அள்ளியனைத்து, கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையென்றால், அனைத்தையும் இழந்தது போல விரக்தியின் விளிம்பிற்கு சென்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கருவளர்சேரி திருத்தலம். இந்த கோவிலின் சிறப்பை பார்ப்போம்.

தஞ்சை மாவட்டத்தில் கருவளர்சேரி என்ற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில். கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் மருதநாநல்லூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி.இங்குள்ள இறைவனின் பெயர் அகஸ்தீஸ்வரர். இறைவியின் பெயர் அகிலாண்டேஸ்வரி.

இந்த கோவிலில் அகத்தியர் தனது மனைவி லோபா முத்திரையுடன் வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலமாகும். இங்கு அகஸ்தியருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பு மிக்க கோவிலாகும்.

இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்பு என்ன வென்றால், இங்கு அம்பிகை புற்று மண்ணாக உருவெடுத்தாள் என்கிறது ஸ்தல புராணம். அம்பிகை சுயமாக தோன்றியதால், இங்குள்ள அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

விசேஷ நாட்களில் அம்பிகைக்கு தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் 9 நாட்களில் மட்டுமே அன்னையை நேரடியாக தரிசனம் செய்ய முடியும்.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு திருமணமான தம்பதிகள் கண்ணீரை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்கின்றனர். காரணம், ஒரு சில பெண்ளுக்கு பல்வேறு காரணங்களால் தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிப்போகிறது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் நவீன முறையில் மருத்துவ சிகிச்சை எடுத்தபோதும், குழந்தை வரம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அப்படி, திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண் இங்கு வந்து மனம் உருகி படி பூஜை செய்தும், நெய்தீபம் ஏற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டிற்கு பின்பு அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்பட்ட மஞ்சள் கிழங்கை வாங்கி வந்து தொடர்ந்து பூசி வந்தால் தடைகள் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலுக்கு வந்து பூஜை செய்த பெண்கள் ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பம் அடைவது கண்கூடாக காணலாம். அப்படி கர்ப்பம் அடைந்த பெண்கள், தங்களுக்கு வளைகாப்பு நடைபெறும்போது கொடுக்கப்படும் வளையலை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.

கர்ப்பம் அடைந்த பெண்கள் இங்கு வந்து அன்னையை வேண்டினால், சிக்கல் இல்லாத பிரசவம் நடைபெறும். மேலும், கருவளர்சேரிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் அனைவரின் உடல் ரீதியாக உள்ள தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனாலேயே, இந்த கோவிலுக்கு தம்பதிகள் சகிதமாக பலரும் வந்து அன்னையின் அருளை பெற்றுச் செல்கின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author