தீபாவளி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Estimated read time 0 min read

தீபாவளி திருநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தின் நான்கு ராஜ வீதிகளில் எழுந்தருளி காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, ஊதா நிற பட்டாடை, மலர் மாலைகள் மற்றும் ஆபரணங்களுடன், கையில் கரும்பு ஏந்தி, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து, கோவில் கோபுர வாசலில் 3 ஆயிரம் வாலா சரவெடி சுமார் அரை மணி நேரம் வெடிக்க, மேளதாளங்கள் முழங்க நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் வெகு விமர்சையாக நடைபெற்றன.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள முருகர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அமாவாசை என்பதாலும், தீபாவளி என்பதாலும் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வருகை தந்தனர். இதனால் கோயில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீஹரிஹர தேவாலயத்தில் லட்டு தேரில் எழுந்தருளிய அன்னபூரணி அம்மனை ஏராளமான பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.

காசியில் தீபாவளி நாளன்று அன்னபூரணி அம்மன் லட்டுத் தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம். அங்கு செல்ல முடியாத சேலம் பகுதி பக்தர்களுக்காக, செவ்வாய்பேட்டை ஸ்ரீஸ்ரீ சாஸ்தா சேவா சமிதி நித்திய அன்னதான டிரஸ்ட் சார்பில், அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீஹரிஹர தேவாலயத்தில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

இதன் மூன்றாம் ஆண்டையொட்டி இன்று அன்னபூரணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவச அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, லட்டுத் தேரில் எழுந்தருளிய அம்மனை சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author