ராஜாஜிக்கு பிறகு புதிய வரலாறு படைத்த முதலமைச்சர் விஜய்!

Estimated read time 1 min read

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, ஒற்றை கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 74 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி அமைச்சரவை மலர்ந்துள்ளது.

கடந்த 1952-ஆம் ஆண்டு ராஜாஜிக்கு பிறகு, 2026-ல் தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டில் இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். தமிழக அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் வரை இடம்பெற சட்டம் அனுமதிக்கும் நிலையில், தற்போது தவெக சார்பில் 31 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும் என மொத்தம் 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையின் மீதமுள்ள 2 இடங்கள் கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட உள்ளன. இதில் முஸ்லிம் லீக் தரப்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் அமைச்சராக பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் வன்னி அரசு அமைச்சராகிறார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கீர்த்தனா (தொழில்துறை), கமலி (கால்நடைத்துறை), விஜயலட்சுமி (பால்வளத்துறை) மற்றும் ஜெகதீஸ்வரி (சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை) ஆகிய நான்கு பெண் எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் பவர்ஃபுல்லான இலாகாக்கள் வழங்கப்பட்டு, பெண்களுக்கான முக்கியத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவையின் மிக முக்கிய அரசியல் வியூகமாக, தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வித் துறையின் இரண்டு முக்கியப் பிரிவுகளும் பட்டியலினத்தவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி கல்வித் துறை தவெக-வின் ராஜ்மோகனுக்கும், உயர்கல்வித் துறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வித் துறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் சமூக நீதிக்கான முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்த அமைச்சரவையில் 7 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், கால்நடைத்துறை அமைச்சர் கமலி, வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் தென்னரசு, பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகிய 7 பேரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளாக வலம் வரவுள்ளனர்.

அதேவேளையில், பிராமண வகுப்பை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்த அமைச்சரவையில் முக்கிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ரமேஷ் அமைச்சராக பொறுப்பேற்று, அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான வெங்கடரமணனுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author