வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்வது?

Estimated read time 0 min read
ரயிலில் ஏறினால் புத்தகமோ, செய்தித்தாளோ கொண்டுவருபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.

அமர்ந்த கையோடு ஒவ்வொருவரும் இயர்ஃபோனைக் காதில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் நாம் இன்று மாறிவிட்டோம்.

குழந்தைகளைக் காட்சிகளும், விளையாட்டுகளும், பாடல்களும் கவர்கின்றன என்பதால் அவர்கள் விரைவிலேயே செல்பேசியின் கட்டுப்பாட்டில் திரண்டுவிடுகிறார்கள்.

புத்தகம் என்பது அவர்களைப் பொருத்தவரை பாடப்புத்தகம் மட்டும்தான். வாசிப்பு என்பது மதிப்பெண்ணுக்காக வாசிப்பது.

கண்கவர் சாதனங்களை ஒரு புத்தகம் போட்டிப் போட்டு வெல்வதும் ஓர் உக்கிரமான புலிக்கூட்டத்தை ஒரு புள்ளிமான் தனித்து நின்று மோதி வீழ்த்துவதும் ஒன்றுதான்.
இருந்தும் நாம் அதே அரதப்பழசான அறிவுரைக் கதைகளையும் சலிக்கச் செய்யும் நீதி போதனைகளையும்தான் கதை எனும் பெயரில் பெருமளவு உற்பத்தி செய்து வருகிறோம்.
வெறும் தகவல்களைச் சேர்த்துக் கட்டி கட்டுரையாகவும் நூலாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இது தகவல்களின் யுகம். ஒரு கணப்பொழுதில் எதையும் செல்பேசியில் கண்டடைந்துவிடமுடியும்.
குழந்தைகளையும் இளம் வாசகர்களையும் வாசிப்பை நோக்கி இழுக்க வேண்டுமானால் அவர்கள் கையிலிருக்கும் செல்பேசியைக் காட்டிலும் அல்லது அதற்குச் சமமான மாயத்தை நிகழ்த்தும் எழுத்துகளை அல்லவா நாம் அவர்கள் கரங்களில் அளிக்கவேண்டும்?
புல்கூடப் போடாமல் புள்ளிமானைப் போருக்கு அனுப்பி வைத்தால் அது எப்படிப் போட்டியிட்டு வெல்லும்?
பலவிதமான கதைகளை பலவிதமான வடிவங்களில் எழுதிக் குவிக்கவேண்டிய காலம் இது. உள்ளடக்கத்தில் மட்டுமின்றி வடிவமைப்பிலும் பல புதுமைகளை நாம் செய்யவேண்டும்.
மொழி, களம், அச்சு, சித்திரம், வண்ணம், வடிவம் என்று அயல்நாட்டு ஆங்கில நூல்களைப் பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அறிவியல்போல் புனைவுக்கும் நாடு, மொழி, பண்பாடு போன்ற எல்லைகள் கிடையாது. எங்கிருந்தும் கற்கலாம். எங்கிருந்தும் அள்ளியெடுத்து வந்து தரலாம். எழுதும் முறை மாறவேண்டுமானால் சிந்தனை முறையும் மாறவேண்டும்.
அதற்கு நாம் அனைவருமே நிறைய வாசிக்கவேண்டும். குறிப்பாக எழுத்தாளர்கள் தம் எல்லைகளை இயன்றவரை விரிவாக்கிக்கொண்டே போக வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.
– வரலாறு, வாழ்க்கை, அரசியல், சமூகம் ஆகிய துறைகளில் பல நூல்கள் எழுதியிருக்கும் எழுத்தாளர் மருதனை அந்திமழை இதழுக்காக தா.பிரகாஷ் எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
– நன்றி: அந்திமழை

You May Also Like

More From Author