பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ராமேஸ்வரம் திருக்கோயில் பிரகாரத்தை முன்னிறுத்தி அதன் புகழை உலகறியச் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி! தலைநகர் புதுதில்லியில் உலகப் பொருளாதாரத்தின் முன்னணி நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சி மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தொடங்கியுள்ளது.
சர்வதேச அரங்கில் பாரதத்தின் பெருமையும் செல்வாக்கும் விண்ணைத் தொட்டு நிற்கும் இவ்வேளையில், உலகத் தலைவர்களை வரவேற்கும் முதன்மை நுழைவு வாயிலில், தமிழகத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் பிரகாரத்தின் பிரம்மாண்டப் பின்னணியை அமைத்து, தமிழர்களின் கட்டிடக்கலையையும் ஆன்மிகப் பெருமையையும் உலக நாடுகளை வியந்து நோக்கச் செய்துள்ளார் பாரதப் பிரதமர் மோடி.
ராமேஸ்வரம் திருக்கோயிலின் பிரகாரங்கள், உலகளவில் கட்டிடக்கலையின் ஈடுஇணையற்ற சாதனையாகப் போற்றப்படுபவை. சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய வல்லரசுத் தலைவர்களை இந்தப் பிரம்மாண்டப் பின்னணியில் நின்று கைகுலுக்கி வரவேற்றதோடு மட்டுமல்லாமல், அந்தப் பிரகாரத்தின் வரலாற்று மகத்துவத்தை அவர்களுக்குத் தாமே ஆர்வத்துடன் பிரதமர்
மோடி அவர்கள் விளக்கிய காட்சி, உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனையும் பெருமிதத்தில் திளைக்கச் செய்துள்ளது. தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழகக் கலாச்சாரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள அளப்பரிய பற்றும் பாசமும் வாய்வார்த்தைக்கானது அல்ல; அது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும் உண்மையான அன்பு என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
இவ்வாறு தமிழகக் கலாச்சாரத்தையும், பெருமையையும் உலகத் தலைவர்களின் கண்களுக்குக் கொண்டு சேர்த்த பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
