பெரியபாளையம் அருகே 2 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால், 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் ஆந்திராவில் கொட்டி தீர்த்த கனமழையால், ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல் மங்களம் கிராமத்திற்கு செல்லும் மண் பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
ஆற்றில் சுமார் 2 அடி உயரத்திற்கு மேலாக தண்ணீர் செல்வதால், முன் தடுப்புகளை அமைத்து போலீசார் போக்குவரத்தை தடை செய்தனர். போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராம மக்கள், பெரியபாளையம் வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கிடப்பில் உள்ள புதுப்பாளையம் – காரணி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.