தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தடை 2வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் மணிமுத்தாறு அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் ஒட்டியுள்ள மாஞ்சோலை, குதிரை வெட்டி, காக்காச்சி உள்ளிட்ட மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கு தற்போது வரை குறையாததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக களக்காடு தலையணை அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதித்துள்ள வனத்துறையினர், அருவியை பார்வையிடுவதற்கு மட்டும் அனுமதியளித்து வருகின்றனர்.
தேனி பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் 3வது நாளாக தடை விதித்துள்ள நிலையில், கும்பக்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.