டெல்லி சுனேஹ்ரி பாக் சாலையில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான மசூதியை இடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி வக்ஃபு வாரியம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி சுனேஹ்ரி பாக் சாலையில் இஸ்லாமிய மசூதி ஒன்று அமைந்திருக்கிறது. இது 150 ஆண்டுகள் பழமையானது. இதன் அருகே தர்கா ஒன்றும் இருந்தது. இந்த தர்கா போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
இந்த சூழலில், சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, மேற்கண்ட மசூதியை இடிக்க புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் முடிவு செய்தது. இது தொடர்பாக மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, மசூதி நிர்வாகம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த ஜூலை 7-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், இடைக்கால உத்தரவில் மசூதியைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டும் வந்தது. இதனால், மசூதி இடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இதன் பிறகு, இந்த வழக்கு கடந்த டிசம்பர் 18-ம் தேதி நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் தலைமையிலான ஒற்றை நீதிபதி பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தனது உத்தரவில், “மேற்கூறிய விஷயங்களில் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதால், இந்த நீதிமன்றம் பிரார்த்தனையை தீர்ப்பதற்கு அவசியமில்லை. இதில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுதிமொழிகளுக்கு இரு தரப்பினரும் கட்டுப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து மசூதி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.