ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வரும் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழித்தடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. அதில் 4வது வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கி.மீ தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில். கடந்த 20 ஆம் தேதி முதன்முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ தொலைவிற்கு 25 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளபட்டது.
இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரை மொத்தம் 9.1 கி.மீ தொலைவிற்கான முழு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி நாளை இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை 25 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்ட நிலையில் இந்த முறை மணிக்கு 35-40 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.