திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

Estimated read time 1 min read

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவை ஒட்டி முருகனும் வள்ளியும் தங்கமயில் வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தனர்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடிய இத்திருவிழாவின் 5-ம் திருநாளான நேற்று மேலக்கோவிலில் வைத்து குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக சுவாமி குமரவிடங்கபெருமான் மற்றும் வள்ளி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து குடைவரைவாயில் தீபாராதனையொட்டி சுவாமியும், அம்பாளும் தனித்தனியே தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கோவில் பிரதான கதவு சாத்தப்பட்டது. அதேநேரத்தில் எதிர்புரம் சுவாமி ஜெயந்திநாதர் கீழரதவீதி முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்ததும், எதிர் சேவைக்காக கதவு திறக்கப்பட்டது.

தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும், எதிர்சேவை ஜெயந்திநாதருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசம் முழங்கினர்.

தொடார்ந்து சுவாமி மற்றும் அம்பாள் தங்க மயில் வாகனத்துடன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு திருவீதிகளில் உலா வந்து அருட் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10- திருநாள் தேரோட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

You May Also Like

More From Author