தமிழக மின்சாரத்துறையின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் வெளியிட்டார். அந்த வெள்ளை அறிக்கையின்படி, கடந்த 25 வருடங்களாகவே மின்சாரத்துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவது அம்பலமாகியுள்ளது. 2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் ரூ.8,355 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து 2006-2011 இல் ரூ.35,463 கோடியாகவும், 2011-2016 இல் ரூ.56,361 கோடியாகவும், 2016-2021 இல் ரூ.58,534 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
நடப்பு 2021-2026 காலகட்டத்தில் மின்சாரத்துறையின் வருவாய் ரூ.4,97,996 கோடியாகவும், செலவு ரூ.5,32,443 கோடியாகவும் இருந்ததால், பற்றாக்குறை ரூ.34,447 கோடியாகக் குறைந்துள்ளது. 25 வருடங்களுக்கு முன்பு லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் இருந்த மின்சாரத்துறை, அதன் பிறகு புதிய பணியிடங்கள் நிரப்பப்படாமலும், முறையான திட்டங்கள் இல்லாமலும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளை அறிக்கை குறித்து மேலும் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மின்சாரத்துறைக்காக ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. கூடுதல் வருவாய் வந்தபோதிலும், செலவினங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன, ஆனால் எந்தவொரு முன்னேற்றத் திட்டங்களும் நடக்கவில்லை; இது ஏன் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக மின்சாரத்துறைக்கு ஒட்டுமொத்தமாக 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது வெறும் 74,714 பேர் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும், 65,921 பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் புதிதாக 15 ஆயிரம் பேரை பணியில் சேர்க்க முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்த நான்கு வருஷத்தில் 1.50 லட்சம் மின்மாற்றிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அதன் பிறகு தினசரி மின் தேவை மற்றும் கொள்முதலை டேஷ் போர்டு மூலம் வெளிப்படுத்துவதாகவும் சூரிய எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படை தன்மையுடன் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் தமிழகத்தில் இந்த வருடம் மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் தெளிவுபடுத்தினார்..
