சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழைச் சூழல் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 7 முதல் நவம்பர் 10 வரையிலான நாட்களில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் விவசாயிகளும் பாதுகாப்பாக இருக்கும்படியும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை நவம்பர் 8-ஆம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நவம்பர் 9-ஆம் தேதியன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 10-ஆம் தேதியன்று தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற ஏனைய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையின் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
