கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டுவதற்கு பிரதமர் மோடி சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் பாதிக்கப்படுவதுடன், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் முதலமைச்சர் விஜய் கவலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியான நடவடிக்கை அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, மேகதாது அணை திட்டத்திற்கு நேரடி தள ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்வதையோ, சட்டப்பூர்வ அனுமதி வழங்குவதையோ தவிர்க்குமாறு ஜல் சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜல் சக்தி அமைச்சகத்தால் சமீபத்தில் நேரடி தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் தொடர் நிர்வாக நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது எனவும் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.
