நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் 2-வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று (நவ.7) நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 26 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்தது. இதனால், DLS முறைப்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வெலிங்டனில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை நின்ற பின் போட்டி தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் வில் யங் 6 ரன்களிலும், டிம் செய்ஃபர்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஹென்றி நிக்கோல்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவரது துல்லியமான பந்துவீச்சில் டாம் லாதம் 7 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதற்கிடையே டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மிட்செல் அரைசதம் கடந்து 55 ரன்களும், சான்ட்னர் 31 ரன்களும் எடுத்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 134 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் குர்னூர் பிரார் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.
கே.எல்.ராகுல் 26 ரன்களுடனும், ஆக்கிப் நபி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 22 ரன்கள் தேவைப்பட்டன.இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் (டிஎல்எஸ்) டக்வொர்த் லூயிஸ் முறையில் முடிவு கணக்கிடப்பட்டது. இதன்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
