2031ல் பாமக தான் ஆட்சி அமைக்கும்…அன்பு மணி ராமதாஸ் அதிரடி!

Estimated read time 1 min read

சென்னை : 2031-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிதான் (பாமக) தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைக்கப் போகிறது, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டைத் தடுத்த ‘மும்மூர்த்திகள்தான்’ இன்று திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்துள்ளனர்” என்று விழுப்புரம் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக பேசியிருக்கிறார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த காலத் திமுக ஆட்சியின் துரோகங்கள், சௌமியா அன்புமணியின் சட்டமன்றச் செயல்பாடுகள் மற்றும் தமிழ்நாட்டில் தற்பொழுது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரங்கள் குறித்துப் பல அதிரடிப் பேச்சுகளை முன்வைத்துள்ளார்.

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், “கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு மனதுடன் தயாராகவே இருந்தார்” என்று ஒரு புதிய ரகசியத்தை உடைத்தார்.

ஆனால், திமுகவின் ‘மும்மூர்த்திகள்’ என்று அழைக்கப்படக்கூடிய முன்னாள் அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகிய மூன்று பேரும்தான், ஸ்டாலினிடம் சென்று வன்னியர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டைக் கொடுத்தால் தென் மாவட்டங்களிலும் மற்ற சமூகத்தினரிடமும் பெரிய பிரச்சினை வந்துவிடும் என்று தொடர்ந்து பயமுறுத்தி, தடுத்துக்கொண்டே இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினார்.

இவர்களின் சுயநலப் பேச்சைக் கேட்டு இடஒதுக்கீட்டைத் தடுத்ததால் இறுதியாகப் பிரச்சினை வரத்தான் செய்தது. ஆனால் அது வன்னியர்களின் வாக்கு வங்கி மூலமாகத் தேர்தலில் எதிரொலித்து, இன்று திமுகவை அரியணையில் இருந்து தூக்கி எறிந்து எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் ஆவேசமாகச் சாடினார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பாமக தொண்டனும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்றும், அனைவரும் தங்களது பின்னால் அணிதிரண்டு வந்தால் வரும் 2031-ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை அமைப்பது உறுதி என்றும் பேசினார்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், “மத்திய அரசு தங்களது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய பின்புதான் நாங்கள் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் எனத் தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்” என்பதைக் குறிப்பிட்டார். ஆனால், மத்திய அரசு நடத்தவிருக்கும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதி வாரியான விபரங்களுக்குப் பெரிய அளவில் எடுபடாது என்றும், மத்திய அரசின் படிவத்தில் நாம்தான் நமது சாதி என்ன என்பதைத் தேடிச் சொல்ல வேண்டிய சூழல் இருக்கும் என்றும் விளக்கமளித்தார்.

எனவே, தமிழக அரசு ஏற்கனவே மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியின்படி, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான முழுமையான உத்தரவாதத்தை தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தத் திட்டத்திற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் மாநில அரசே நேரடியாகக் களத்தில் இறங்கி வழங்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தனது மனைவியும் பாமக எம்பியுமான சௌமியா அன்புமணி ஆற்றிய உரைகள் குறித்து ஒரு சுவாரசியமான நெகிழ்ச்சியான விபரத்தைப் பகிர்ந்துகொண்டார். “கடந்த வாரம் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு முக்கியத் திருமண நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது அங்கு எனது பழைய பள்ளி நண்பர்களும், அவர்களது மனைவிகளும் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் என்னிடம் வந்து, சௌமியா அன்புமணி தற்பொழுது சட்டமன்றத்திற்குள் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவும், கல்வி மற்றும் உரிமைகளுக்காகவும் எத்தனையோ ஆக்கப்பூர்வமான நல்ல விஷயங்களைப் பேசி வருகிறார். அவரது இந்த மாஸ் பேச்சுகளைப் பார்த்து நாங்கள் அனைவரும் அவருக்குப் பெரிய ரசிகர்களாக மாறிவிட்டோம், எனவே சௌமியா அன்புமணிக்குத் தமிழ்நாட்டில் ஒரு புதிய ‘ரசிகர் மன்றம்’ (Fans Club) ஆரம்பிக்கப் போகிறோம் என்று ஆசையோடு கூறினார்கள்” எனத் தெரிவித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

You May Also Like

More From Author