விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த 12ம் தேதி விபத்தில் சிக்கியது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் வெள்ளை எரிபொருள் முழுவதுமாக இருப்பு இருந்த நிலையில் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயனித்த இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேரில் 241 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்துள்ளார். விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட CVR, FDR தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. அனைத்து நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்டங்கள், சர்வதேச கடமைகளுக்கு உட்பட்டு உரிய காலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், CVR, FDR சாதனங்கள் அகமதாபாத்தில் 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்பட்டுவரும் நிலையில், கருப்புப் பெட்டியின் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டன. பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடப்பதாக விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.