தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான குலசை முத்தாரம்மன் திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நவராத்திரி திருவிழாவின் பத்து நாட்களும் அம்மன் பல்வேறு விதமான திருவுருவங்களில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்தத் திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், வரும் 20ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தசரா திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான ‘சூரசம்ஹாரம்’ நிகழ்ச்சியை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து சில அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, சூரசம்ஹாரம் நடைபெறும் முக்கியப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம் , யூடியூப்மற்றும் பிற சமூக வலைதளப் பிரபலங்கள், செல்ஃபி மோகத்தில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவு செய்வதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் செயல் அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கும், திருவிழா எந்தவித இடையூறும் இன்றிச் சுமூகமாக நடைபெறுவதற்கும் இந்தத் தடை அவசியமானது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்த்து, சட்டம்-ஒழுங்கைப் பேணுகின்ற வகையில் காவல்துறையினரும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
