திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இலவசமாக லட்டு மற்றும் வடை பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த சிறப்புச் சலுகையின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு பெரிய லட்டு மற்றும் ஒரு வடை பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இலவசப் பிரசாத விநியோகமானது நவம்பர் 7-ஆம் தேதி முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக வளாகத்தின் புதிய ஜபாலி கட்டடத்தில் நாள்தோறும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
ஒரே நேரத்தில் அதிகளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் முதியவர்கள் சிரமப்படாமல் இருக்கவும், ஓய்வூதிய ஆணை எண்ணின் அடிப்படையில் பிரசாதம் பெறுவதற்கான தேதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிய நாளில் அசல் ஸ்மார்ட் கார்டைக் கட்டாயம் எடுத்துச் சென்று தங்களின் இலவசப் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
