தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் 22 கோடி ரூபாய் டிஜிட்டல் மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் பராமரிக்கப்பட்டு வந்த தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 14 கோடி ரூபாயும், நாகப்பட்டினத்தில் 3 கோடியே 10 லட்சம் ரூபாயும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 5 கோடி ரூபாயும் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளுக்குப் பணம் செலுத்த உருவாக்கப்பட்ட இணையதளத்தில் சைபர் குற்றவாளிகள் ஊடுருவி பணத்தைத் திருடியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வெளிநாட்டு சைபர் கும்பல்களுக்குத் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கவும், தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 8 கோடியே 85 லட்சம் ரூபாய் டிஜிட்டல் மோசடி நடந்த நிலையில், தமிழக அரசுத் துறையிலும் அரங்கேறிய இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
