கோவா என்றாலே அழகான கடற்கரைகளும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களும்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், கோவாவில் உள்ள பாலோலம் கடற்கரை தற்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஆசியாவின் சிறந்த கடற்கரையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடம், உலகின் சிறந்த 25 கடற்கரைகள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய கடற்கரை தரவரிசைப் பட்டியலில் பாலோலம் கடற்கரை 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் முதல் 25 கடற்கரைகள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஆசியக் கடற்கரையும் இதுதான். நிபுணர்களின் பரிந்துரைகள், சுற்றுலாப் பயணிகளின் கருத்துகள், கடல் நீரின் நிறம் மற்றும் தெளிவு உள்ளிட்ட 18 அம்சங்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெற்கு கோவாவின் கனகோனா பகுதியில் அமைந்துள்ள பாலோலம் கடற்கரை, பிறை நிலவு போன்ற வளைவான கடற்கரை அமைப்பு, வெண்மையான மணல் பரப்பு, வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள் மற்றும் அமைதியான கடல் நீர் ஆகியவற்றால் தனித்துவமாகத் திகழ்கிறது. இயற்கை அழகுடன் சிறந்த சுற்றுலா அனுபவத்தையும் வழங்குவதால் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
இங்கு கடலில் நீந்துவது, கயாக்கிங் எனப்படும் துடுப்புப் படகு சவாரி, டால்பின்களைக் காண படகுப் பயணம் செல்வது, அருகிலுள்ள நீர்வழிப் பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பது போன்ற அனுபவங்களைப் பெறலாம். மேலும், கடற்கரையைச் சுற்றியுள்ள கிராமங்கள், உணவகங்கள் மற்றும் ஓய்வுக்கான வசதிகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. இயற்கைச் சூழல், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்துவதிலும் கோவா அரசு கவனம் செலுத்தி வருகிறது.
