அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தங்கும் காலத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து புதிய விசா கொள்கையைக் கொண்டு வந்தது.
ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, வெளிநாட்டு மாணவர்கள் தங்களது படிப்பு முடியும் காலம் வரை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், டிரம்ப் அரசின் புதிய விதியின்படி, மாணவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்க முடியும்; அதன்பிறகு விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதேபோல், 5 ஆண்டுகள் வரை தங்க அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் விசா காலம், 240 நாட்களாகவும், சீன பத்திரிகையாளர்களுக்கு 90 நாட்களாகவும் குறைக்கப்பட்டது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இந்த முடிவை எதிர்த்து, அமெரிக்க பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டென்னிஸ் சேலர், டிரம்ப் அரசின் புதிய விசா கொள்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.தனது உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது: அரசின் இந்த புதிய கொள்கை தன்னிச்சையானது, அதிகார துஷ்பிரயோகம் கொண்டது மற்றும் சட்டத்திற்கு புறம்பானது. வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதையே சட்டமன்றம் ஊக்குவிக்க விரும்புகிறது. ஆனால், பி.எச்.டி., போன்ற நீண்ட கால ஆராய்ச்சிப் படிப்புகளைத் தடுக்கும் வகையிலும், மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் வகையிலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயல்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்காவில் 11 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் இந்திய மாணவர்களே அதிக அளவில் உள்ளனர். முன்னதாக செப்டம்பர் மாதம் இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டிருப்பது வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சட்டப் போராட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
