வங்கக்கடலில் உருவாகும் புயல்! சென்னைக்கு நவ.19 மிக கனமழை எச்சரிக்கை

Estimated read time 1 min read

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று மாலை புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு 11:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து இன்று காலை 8:30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலவிவரும் இந்த அமைப்பு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலையில் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தீவிரமடையும் புயல் மேலும் வலுவடைந்து, நாளை நவம்பர் 17ஆம் தேதி மாலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு தீவிரப் புயலாக மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் வேளையில் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாகக் கடக்க வாய்ப்புள்ளது. இந்த மிகத் தீவிரப் புயல் கரையை மிக நெருங்கும் வேளையில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுமார் 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளக் கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் மழை நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்ந்து வரும் நவம்பர் 19ஆம் தேதி அன்று வானிலையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும். மேலும், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். பிற தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் 20ஆம் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். மேலும், நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author