கோவை மாநகரம் முழுவதும் அதிகாலை நிலவிய கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோவை மாநகரம் முழுவதும், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காலை 7 மணி வரை அடர்பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக வாகனங்களை இயக்கினர்.
அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றவர்கள் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஸ்வெட்டர் அணிந்தும், உடலை முழுவதுமாக மூடியும் சென்றனர். கடும் பனிமூட்டத்தால் காலை நேரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், சாலைகளில் பயணிப்போர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் நிலவிய பனிப்பொழிவால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் ரம்மியமாக காட்சியளித்தன. டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி இறுதி வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும் நிலையில், காஞ்சிபுரத்தில் முன்பனிக்காலம் தற்போதே தொடங்கியுள்ளது. சாலைகளில் நிலவிய அடர்ந்த பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர்.
ரயில் நிலையங்கள், இருப்புப் பாதைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டதால், காஞ்சிபுரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் காலை 8 மணி வரை வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திருத்தணியில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
திருப்பதி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி – சித்தூர் மற்றும் திருத்தணி – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். திருத்தணி முருகன் மலைக்கோயிலும் பனிமூட்டத்தால் சூழப்பட்டது.
