கோவை மாவட்டத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய டாப் 15 கோவில்கள்..!

Estimated read time 1 min read

கோவை மாவட்ட டாப் 15 கோவில்கள் :

1. மருதமலை முருகன் கோவில் – மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை, முருகப் பெருமானின் அறுபடை வீடு கோவில்களுக்கு அடுத்தபடியாக அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாக உள்ளது. இங்குள்ள முருகன் மட்டுமல்ல, விநாயகரும் சுயம்புவாக தோன்றியவர் ஆவார்.

2. உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் – உக்கடத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் 250 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். கோவையின் சக்தி வாய்ந்த கோவில்களில் இதுவும் ஒன்று.

3. மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் – சுயம்பு மூர்த்தியாக தோன்றி, தீவினைகளை அழித்து, பக்தர்களை காக்கும் தெய்வமாக மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் விளங்கும் கோவில் இது.

4. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் – தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான மாசாணி அம்மன் கோவில், அம்மன் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

5. புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் – துதிக்கையில் அமிர்த கலசத்தை ஏந்திய நிலையில், இடது காலில் மகாபத்மம் கோலத்தில் விநாயகர் காட்சி தரும் கோவில். ஆசியாவிலேயே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப் பெரிய விநாயகர் சிலை இங்கு மட்டுமே உள்ளது.

6. ஈச்சனாரி விநாயகர் கோவில் – விநாயகர் 5 அடி உயரத்தில் காட்சி தரும் கோவில். கோவை மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் இக்கோவில் மிகவும் முக்கியமானதாகும்.

7. காரமடை அரங்கநாதசாமி கோவில் – உடலில் வெட்டுப்பட்ட தழும்புடன், சுயம்பு மூர்த்தியாக சதுர வடிவில் பெருமாள் காட்சி தரும் கோவில் இது. செல்வம் பெருக அதிகமான பக்தர்கள் வந்து வழிபடும் தலம் இதுவாகும்.

8. தர்மலிங்கேசுவரர் கோவில் – திருவண்ணாமலையை போன்றே பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லும் கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு சுயம்பு மூர்த்தியாக சிவ பெருமான் காட்சி தருகிறார்.

9. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் – முக்தியை அருளும் தலமாக இருக்கும் இக்கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் மீது காமதேனு பால் சுரந்ததால் ஏற்பட்ட தழும்பினை இன்றும் காணலாம்.

10. வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் – 7 மலைகளை கொண்ட 6350 அடி உயரத்தில் உள்ள குகையில் சுயம்புவாக பஞ்ச லிங்கங்களாக சிவன் காட்சி தரும் மலை.

11. பாலமலை அரங்கநாதர் கோவில் – பாவங்களை போக்கும் இக்கோவிலில் வந்து வேண்டிக் கொண்டால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

12. வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் – இங்குள்ள புற்று மண்ணை வயலில் கொண்டு சென்று போட்டால் விஷ ஜந்துக்களின் தொல்லை நீங்கும். எவ்வளவு எடுத்தாலும் புற்றுமண் குறையாமல் இருக்கும் அதிசய கோவில்.

13. ஓதிமலை முருகன் கோவில் – ஐந்து முகங்கள், எட்டு கரங்களுடன் முருகன் காட்சி தரும் ஒரே தலம் இது மட்டும் தான். பழனியை விட பழமையான மலையாக இந்த மலை கோவிலாக கருதப்படுகிறது.

14. தண்டுமாரியம்மன் கோவில் – கோவை மக்கள் பலரின் குலதெய்வமாக விளங்குகிறது இக்கோவில். சுயம்புவாக தோன்றி அம்மன் வசிக்கும் இடமாக மக்கள் கருதும் கோவில் இது.

15. அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் – ஆஞ்சநேயரின் தாகத்தை போக்குவதற்காக முருகன் நீர் ஊற்று ஏற்படுத்திய கோவில் இதுவாகும். மன அமைதியை தரும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author