தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அ.தி.மு.க-வை நிர்ப்பந்தம் செய்து பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.
மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே குறிக்கோளாக இருந்தாரே தவிர, தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகங்களுக்குப் பதில் சொல்லவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தராதது, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்தி மொழியைத் திணிப்பது மற்றும் தமிழக ஆளுநர் மசோதாக்களை முடக்கி வைத்திருப்பது போன்ற செயல்கள் ஒன்றிய அரசின் பாரபட்சமான போக்கைக் காட்டுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி ஒதுக்கீட்டில் பா.ஜ.க அரசு பெரும் வஞ்சகம் செய்து வருவதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இயற்கை பேரிடர் நிவாரணமாகக் கேட்கப்பட்ட தொகையில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டுமே வழங்கிவிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு நிராகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது, இலவச மின்சாரத் திட்டத்திற்கு ஆபத்து விளைவிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் மோடி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கைக் கடைபிடித்து வருவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் மீது அக்கறை இருப்பது போல பிரதமர் மோடி வேடம் போடுவதாகச் சாடியுள்ள காங்கிரஸ், நிதி ஒதுக்கீட்டில் உள்ள பாரபட்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்கு சுமார் 2,532 கோடி ரூபாய் ஒதுக்கிய ஒன்றிய அரசு, செம்மொழியான தமிழுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 11 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வரிப் பகிர்விலும் தமிழகம் கொடுத்த தொகையில் மிகச்சிறிய அளவே திரும்பக் கிடைப்பதாகவும், இத்தகைய துரோகங்களால் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
