சென்னை : தமிழகத்தில் திமுக ஆட்சியின் 56 மாத காலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்களை மக்கள் அறிந்திருப்பார்கள் என்று கூறிய அவர், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.மகாத்மா காந்தி கூறியபடி, நடு இரவில் ஒரு பெண் தனியாக பாதுகாப்பாக நடந்து சென்றால்தான் உண்மையான சுதந்திரம் என்று குறிப்பிட்ட எடப்பாடி, திமுக ஆட்சியில் காவல்துறையை தனது ஏவல் துறையாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று விமர்சித்தார்.
6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை சாலையில் நடக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், போதை ஆசாமிகள் எந்த நேரம் சீரழிப்பார்கள் அல்லது கொலை செய்வார்கள் என்று தெரியாத அச்சம் நிலவுவதாகவும் அவர் கூறினார். தீய சக்தியான திமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், ரோம் நகரம் எரியும்போது நீரோ பிடில் வாசித்தது போல மகளிர் மாநாடு நடத்துகிறார் என்றும் அவர் கிண்டலடித்தார்.
திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மை காரணமாக இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக எடப்பாடி குற்றம்சாட்டினார். நிதி இல்லாத நிலையில் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது வெறும் நாடகம் என்று அவர் விமர்சித்தார். சென்னை தரமணியில் வெளி மாநில இளம்பெண் போதை ஆசாமிகளால் சீரழித்து கொல்லப்பட்ட சம்பவம், கண்முன்னே மனைவி பலாத்காரம் செய்யப்படுவதை தடுத்த கணவனும் இரண்டு வயது குழந்தையும் கொல்லப்பட்ட கொடூரம் ஆகியவை திமுக ஆட்சியின் லட்சணத்தை காட்டுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நந்தனம் அரசு கலைக்கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் அரியலூர் பெண் திமுக பிரமுகரால் சீரழிக்கப்பட்டு அவரது நண்பர்களுக்கு விருந்தாக்கப்பட்ட கொடுமையை எடுத்துக்காட்டிய எடப்பாடி, கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசை கண்டு பயமில்லாத நிலை உருவாகியுள்ளதாகவும், அதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம் என்றும் கூறினார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆளும் கட்சியினர் அடைக்கலம் அளிப்பதால் தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக மக்கள் புலம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை போதைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும், அவற்றை கொண்டு செல்வதில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதாகவும் எடப்பாடி குற்றம்சாட்டினார்.
பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், பள்ளி மாணவிகள் சீருடையிலேயே மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவது திமுக ஆட்சியின் சீரழிவை பறைசாற்றுவதாகவும் அவர் விமர்சித்தார்.ஒட்டுமொத்தமாக, திமுக ஆட்சியின் 56 மாத காலம் சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், மக்கள் நலன் ஆகியவற்றில் முழு தோல்வியை சந்தித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
