சென்னையில் தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்- 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Estimated read time 1 min read

சென்னை பெருநகரில் வாக்கு எண்ணும் நாளன்று சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 கடந்த 23.04.2026 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆயுதங்கள் ஏந்திய காவல் குழுவினர் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில், இணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், துணை ஆணையாளர்கள் தலைமையில் மேற்படி 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அபின் தினேஷ் மோதக், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், வாக்கு எண்ணும் 04.05.2026 நாளன்று சென்னை பெருநகர் முழுவதும் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, மத்திய ஆயுதப்படை பிரிவைச்சேர்ந்த காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 22,000 போலீசார் 3 வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் சென்னை பெருநகர் காவல் எல்லை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

1) வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தடுப்பதற்காக, அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மும்முனைப் பாதுகாப்பு வளைய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. பாதசாரிகள் மண்டலத்தின் தொடக்கத்தில் வெளிப்புற வளையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட நபர்களின் அடையாளம் மற்றும் அங்கீகாரத்தைச் சரிபார்க்க போதுமான காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2) இந்தியத் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் அதிகாரியால் முறையாக வழங்கப்பட்ட, செல்லுபடியாகும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை (Photo Identity Card) இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நுழைவை ஒழுங்குபடுத்துவதற்கும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவாயிலிலும் உயர் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

3) ஊடகத்தினர் கேமராக்கள் அல்லது வீடியோ கேமராக்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது. இருப்பினும், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அங்கீகார அட்டைகளைக் (Valid Authorization Passes) கொண்ட ஊடகத்தினர் கையடக்கக் புகைப்பட கேமராக்கள் மற்றும் வீடியோ கேமராக்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் குறிப்பிட்ட எல்லை வரை அனுமதிக்கப்படுவர்.

4) தேர்தல் பார்வையாளரைத் தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் கூடத்திற்குள் கைப்பேசியைக் (Mobile Phones) கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

5) கூர்மையான பொருட்கள், தீக்குச்சிகள், கம்பிகள், லைட்டர்கள், வெடிபொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், தடைசெய்யப்பட்ட பொருட்களான மண்ணெண்ணெய், கைபேசிகள், கேமராக்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் போன்றவற்றை வாக்கு எண்ணும் மையத்திற்குள் யாரும் கொண்டு வர அனுமதியில்லை.

6) தனிநபர்கள், உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வளையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் குடீநீர் அருந்த வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் மீண்டும் உள்ளே நுழையும்போது நுழைவாயிலில் முழுமையாகச் சோதனையிடப்படுவார்கள். பலமுறை நுழைவதற்கான அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளிப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெளியே செல்லும் எவரும் மீண்டும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். முகவர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியவுடன், அவர்கள் மீண்டும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

7) குடிபோதையில் இருக்கும் நபர்கள் (Drunken Persons) யாரும் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author