பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த 23ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரம் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அதிகாலை முதலே மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றவும், முருகனின் அருளைப் பெறவும் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி ஏந்தி, “அரோகரா” கோஷத்துடன் திருப்பரங்குன்றம் மலை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். .
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் காப்பு கட்டி விரதமிருந்து ஏராளமான பக்தர்கள் பறவை காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி எடுத்து வழிபட்டனர். மேலும், பக்தி கோஷங்கள் முழங்க பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் பரிமளரெங்கநாதர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியையொட்டி பரிமளரெங்கநாதர் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள மதுரை காளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் தலை அலங்காரம் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொட்டியத்தில் உள்ள புகழ்பெற்ற மதுரை காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரை கட்டமைக்கும் திருத்தேர் ‘தலை அலங்காரம்’ நடைபெற்றது.
அப்போது, சாரம் அமைத்து தேரின் தலைப்பகுதியை மேலே கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பினர். நாளை மாலை திருத்தேர் புறப்பாடு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.
