தீபாவளி அன்று இந்த ஸ்தோத்திர மகிமையைப் படிப்பதால் கங்கை மகிழ்ந்து ஆசீர்வதிப்பாள்.
பாவத்தை அழித்து புண்ணியத்தைப் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்!
கங்காதரனுடைய ஜடா முடியில் இருப்பவளுக்கு நமஸ்காரம்!
கோடியோஜனை பரப்பும் கோடி யோஜனை ஆழமும், லட்சம் யோஜனை நீளமும் கொண்டு
கோலோகாத்தைச் சூழ்ந்திருக்கும் கங்கா தேவிக்கு நமஸ்காரம்!
அறுபது லட்சம் யோஜனை அகலமும், அதை விட நான்கு பங்கு அதிகம் கொண்ட நீளமுமாக
வைகுண்டத்தில் வியாபித்திருக்கும் கங்கைதேவிக்கு நமஸ்காரம்.
முப்பது லட்சம் யோஜனை பரப்பளவும், அதற்கு ஐந்து மடங்கு நீளமும் கொண்டு
பிரம்ம லோகத்தை சூழ்ந்திருக்கும் கங்கா தேவிக்கு நமஸ்காரம்.
முப்பது லட்சம் யோஜனை அகலமும், அதற்கு நான்கு பங்கு நீளமும் கொண்டவளாக
சிவலோகத்தில் வியாபித்திருக்கும் கங்கா மாதாவுக்கு நமஸ்காரம்.
லட்சம் யோஜனை அகலமும். ஏழு லட்சம் யோஜனை நீளமும் கொண்ட
சந்திர மண்டலத்தில் ஓடுகின்ற கங்காயம்மாவிற்கு நமஸ்காரம்.
அறுபதினாயிரம் யோஜனை அகலமும், அதைவிட பத்து மடங்கு நீளமும் கொண்டு
சூரிய மண்டலத்தில் ஓடுகின்ற கங்கையம்மனுக்கு நமஸ்காரம்.
லட்சம் யோஜனை அகலமும், ஐந்து லட்சம் யோஜனை நீளமும் கொண்டு
தபோலோகத்தில் ஓடும் கங்கையம்மனுக்கு நமஸ்காரம்.
ஆயிரம் யோஜனை அகலமும், பத்தாயிரம் யோஜனை நீளமும் கொண்டு,
ஜனர் லோகத்தில் வியாபித்திருக்கும் கங்கையம்மனுக்கு நமஸ்காரம்.
பத்து லட்சம் யோஜனை அகலமும், ஐம்பது லட்சம் யோஜனை நீளமும் கொண்டு
மகாலோகத்தில் ஓடும் கங்கை மாதாவுக்கு நமஸ்காரம்..
ஆயிரம் யோஜனை நீளமும், லட்சம் யோஜனை அகலமும் கொண்டு இமாலயத்திலும்,
பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும்
கொண்டு போகவதி என்ற பெயரோடு பாதாளத்திலும்,
அகல நந்தா என்ற பெயரில் பூமியிலும் ஓடும் கங்கா மாதாவுக்கு என் நமஸ்காரங்கள்.
கிருதயுகத்தில் பால் போன்றும், திரேதாயுகத்தில் சந்திரன் போன்றும்,
துவாபரயுகத்தில் சந்தனம் போலவும், கலியுகத்தில் தண்ணீர் போன்றும்,
சுவர்க்கத்தில் எல்லா யுகங்களிலும் பால் போன்றும் இருக்கும் கங்கா மாதாவுக்கு என் நமஸ்காரங்கள்.
எந்த நதி தேவதையின் நீர்த்திவலை பட்டவுடன் பாவங்களை எல்லாம் நசிக்கின்றதோ அந்த கங்கா தேவிக்கு என் நமஸ்காரங்கள்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                                     
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                