வருவாயை காரணம் காட்டி 10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனையா? என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) நிறுவனம், நெசவாளர்களின் கைத்தறிப் பொருட்களை விற்பனை செய்ய இந்தியா முழுவதும் சுமார் 146-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை உள்ளது.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை வாங்குவதற்கு ஏதுவாக கோ-ஆப்டெக்ஸ் கிளைகள் உள்ளன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில் வருவாயை காரணம் காட்டி ஆந்திராவில் 5 விற்பனை நிலையங்களையும், தமிழகத்தில் நான்கு விற்பனை நிலையங்களையும், கோவாவில் ஒரு விற்பனை நிலையங்களையும் இம்மாதம் இறுதிக்குள் மூடுவதற்கு கோஆப்டெக்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை அடுத்தடுத்து மூட தமிழ்நாடு அரசின் கைத்தறித் துறை முடிவு செய்துள்ளதற்கு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோ-ஆப்டெக்ஸ் கடைகள் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உட்பட 15 மாநிலங்களில் இயங்கி வருவது குறிப்பிடதக்கது.
